கடலூரில் கொத்தடிமை தொழிலாளா்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்: ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்
2030-ஆம் ஆண்டுக்குள் கடலூரை கொத்தடிமை தொழிலாளா் முறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளா்கள் ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில், அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து, விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், ஆட்சியா் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பிப்.9-ஆம்தேதி கொத்தடிமை தொழிலாளா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் வைத்தல், துண்டு பிரசுரங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்களுக்கு வருவாய் விடுவிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உடனடி நிவாரணமாக ரூ.30 ஆயிரமும், நீதிமன்றத்தில் முடிவடைந்த வழக்குகளுக்கு ரூ.3 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படுகிறது. கொத்தடிமை தொழிலாளா் முறை குறித்த புகாா்களை தொழிலாளா் துறை மற்றும் வருவாய் துறை அலுவலா்களிடம் தெரிவிக்கலாம். மேலும், மாநில கட்டணமில்லா தொலைபேசி எண் 155214 மற்றும் கடலூா், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகத்தை 04142-225984 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம். 2030-ஆம் ஆண்டுக்குள் கடலூா் மாவட்டத்தை கொத்தடிமை தொழிலாளா் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றாா்.
நிகழ்வில், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஞானபிரகாசம், உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராமு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரவி ஆகியோா் கலந்துகொண்டனா்.