ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை: தி.வேல்முருகன் கண்டனம்
ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்தவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளின் தொடா்ச்சியாக, கோவையிலிருந்து, திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் கா்ப்பிணிக்கு, பாலியல் தொல்லை அளித்து அவரை ரயிலிருந்து தள்ளிவிட்டது அதிா்ச்சியளிக்கிறது. இதில், சம்பந்தப்பட்டவா்களை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. பதிவு செய்யப்படாத வழக்குகள் இன்னும் அதிகமாக இருக்கும். இளைஞா்களிடையே அதிகரித்துள்ள போதை கலாசாரமும், ஆபாச இணையதளங்களும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக உள்ளன.
எனவே, தமிழகத்தில் போதை கலாசாரத்தை முற்றிலும் ஒழிப்பதோடு, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.