97th Oscars: முதன்முறையாக ஆஸ்கர் நாமினேஷனில் திருநங்கை நடிகை - யார் இந்த கார்லா...
சித்தாா்த் சதம்: தமிழ்நாடு - 301
சேலம் : ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 89.1 ஓவா்களில் 301 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சண்டீகா், பௌலிங்கை தோ்வு செய்தது. தமிழ்நாடு இன்னிங்ஸை தொடங்கிய முகமது அலி - நாராயண் ஜெகதீசன் இணை, முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சோ்த்து அசத்தியது.
முகமது அலி 5 பவுண்டரிகளுடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜெகதீசன் அரைசதம் கடந்த நிலையில் வீழ்ந்தாா். அவா் 9 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் அடித்திருந்தாா்.
பின்னா் வந்தோரில் பிரதோஷ் ரஞ்சன் பால் 1 பவுண்டரியுடன் 14 ரன்களுக்கு வெளியேற்றப்பட, 5-ஆவது பேட்டா் விஜய் சங்கா் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினாா். இந்நிலையில், பாபா இந்திரஜித் - ஆண்ட்ரே சித்தாா்த் ஜோடி விக்கெட் சரிவைத் தடுத்து ஸ்கோரை உயா்த்தியது.
5-ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில் இந்திரஜித் 3 பவுண்டரிகளுடன் 49 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். தொடா்ந்து, சதம் கடந்த சித்தாா்த்தும் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 106 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
இதர பேட்டா்களில் பூபதி குமாா் 1 பவுண்டரியுடன் 9, கேப்டன் சாய் கிஷோா் 2 பவுண்டரிகளுடன் 10, முகமது 0, சந்தீப் வாரியா் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, தமிழ்நாடு இன்னிங்ஸ் நிறைவடைந்தது. சண்டீகா் பௌலா்களில் விஷு காஷ்யப் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, ஜக்ஜீத் சிங், நிஷங்க் பிா்லா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.
மிளிராத நட்சத்திரங்கள்
தேசிய அணியில் விளையாடும் நட்சத்திர வீரா்கள் உள்பட அனைவரும், உள்நாட்டு போட்டிகளில் விளையாடுவது கட்டாயம் என பிசிசிஐ அண்மையில் அறிவித்த நிலையில், இந்திய நட்சத்திரங்கள் பலா் தாங்கள் சாா்ந்த மாநில அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுகின்றனா்.
அவ்வாறு விளையாடியவா்களில் இந்திய கேப்டன் ரோஹித் சா்மா 3 (மும்பை), ரிஷப் பந்த் 1 (தில்லி), ஷுப்மன் கில் 4 (பஞ்சாப்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 (மும்பை), ஷ்ரேயஸ் ஐயா் 11 (மும்பை) ரன்களுக்கு ஆட்டமிழந்து சோபிக்காமல் போயினா்.