Keerthy Suresh: இது கீர்த்தி சுரேஷின் 'Wedding Party' - அட்டகாச கிளிக்ஸ்!
பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்; அதிர்ச்சி வீடியோ - முதல்வர் தலையிட வலியுறுத்தல்
பஞ்சாப்பில் குரு காஷி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகளிர் கபடி போட்டியில், தமிழ்நாட்டின் அன்னை தெரசா பல்கலைக்கழக அணிக்கும், தர்பாங்கா பல்கலைக்கழக அணிக்கும் நடைபெற்ற போட்டியில், தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாயிண்ட்ஸ் விவகாரத்தில் நடுவர்களிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், தமிழக அணியின் பயிற்சியாளர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, முதல்வரும், துணை முதல்வரும் இதில் தலையிட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து, எக்ஸ் தலத்தில் செல்வப்பெருந்தகை, ``இன்று(23.01.2025) பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே கபடி போட்டியின் போது ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதைக் கண்டித்து கேள்வி எழுப்பிய தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
மேலும் தமிழ்நாட்டின் கபடி பயிற்சியாளரைக் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, நம் மாநில விளையாட்டு வீரர்களை பாதுகாக்க வேண்டுமெனவும், பஞ்சாபில் இருந்து அவர்களைப் பத்திரமாக அழைத்து வரவேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்." என்று பதிவிட்டிருக்கிறார்.