அதிமுக தலைமையில்தான் கூட்டணி; வேறு சில கட்சிகளுடனும் கூட்டணி?
சின்னசாமி திடலில் ரஜத் படிதாருக்கு காத்திருக்கும் சவால்: ஜிதேஷ் சர்மா
ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் ஜிதேஷ் சர்மா ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதாருக்கு மிகப்பெரிய சவால் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
ஆர்சிபி அணி 8இல் 3 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் இருக்கிறது.
சொந்த மண்ணில் நடைபெற்ற அனைத்து போட்டிகளில் இந்த சீசனில் ஆர்சிபி தோல்வியுற்ற நிலையில் இன்றிரவு (ஏப்.24) சின்னசாமியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவிருக்கிறது.
ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
சொந்த மண்ணில் தோல்வியுறும் சாபத்தை முறியடிப்பாரா ரஜத் படிதார் என ஆர்சிபி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ரஜத் படிதார் வெற்றிக்கு காரணம் என்ன?
ரஜத் படிதார் குறித்து ஜிதேஷ் சர்மா பேசியதாவது:
ரஜத் மிகவும் எளிமையானவர். டிரெஸ்சிங் ரூமில் (ஓய்வறை) அவர் இருப்பதே தெரியாது. ஆனால், மைதானத்தில் காலடி வைக்கும்போதுதான் அவர் கேப்டன் என்று உணர்வீர்கள்.
ரஜத் படிதார் அழுத்தமான தருணங்களிலும் அமைதியாகவே இருப்பார். நான் விக்கெட் கீப்பராக அவரிடம் யோசனைகளை கூறினால், உடனே கேட்டு ‘இது நடந்தால் என்ன செய்யலாம்?’ என்று கேட்பார். இதுதான் அவர் வெற்றியாளராக இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
சின்னசாமியில் காத்திருக்கும் சவால்
ரஜத் படிதாருக்கு இன்னும் ஒரு பெரிய சவால்தான் இருக்கிறது. இந்த சீசனில் சின்னசாமியில் எங்களின் முதல் வெற்றியைப் பெற வேண்டும். ஆனால், நம்பிக்கை மட்டும் மிகவும் பலமாக இருக்கிறது
எனக்கு தோன்றுவது என்னவென்றால் உங்கள் உள்ளுணர்வை நம்புவதே முக்கியம்.
விளையாட்டு மிகவும் வேகமாக நகரும். யோசிக்க நேரமே இருக்காது. என்ன சிந்தனை வந்தாலும், அதை நம்பி செயல்பட வேண்டும். உங்கள் உள்ளம் சொல்வதையே கேளுங்கள் என்றார்.
17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை வெல்லாத அணியாக இருக்கும் ஆர்சிபிக்கு ரஜத் படிதார் கோப்பையை வென்று தருவாரென பலரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.