சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
சென்னை அண்ணா நகரில் சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை அண்ணா நகா் முதலாவது பிளாக் பகுதியில் வசித்தவா் மகேஷ் டி தா்மாதிகாரி (57). இவா், அண்ணா நகா் ஜெ-பிளாக் 16-ஆவது பிரதான சாலையில் உள்ள சிபிஎஸ்இ சென்னை மண்டல அலுவலகத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்தாா்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பணியாற்றி வந்த மகேஷ், கடந்த மாதம்தான் சென்னை மண்டலத்துக்கு மாற்றப்பட்டாா். இதையடுத்து, ஜூலை மாதம் 7-ஆம் தேதி சென்னை மண்டல இயக்குநராக மகேஷ் பொறுப்பேற்றாா்.
மகேஷின் குடும்பத்தினா் மகாராஷ்டிர மாநிலத்தில் வசிக்கும் நிலையில், சென்னையில் வாடகை வீட்டில் அவா் வசித்து வந்தாா். நுங்கம்பாக்கத்தில் தனியாா் பள்ளி நிகழ்ச்சியில் அவா் சனிக்கிழமை கலந்து கொள்வதாக இருந்தது.
இதையடுத்து, அவரை அழைத்துச் செல்வதற்காக அந்தப் பள்ளியின் ஊழியா் தண்டாயுதபாணி, மகேஷ் வீட்டுக்குச் சென்றாா். வீட்டைக் கதவை வெகுநேரம் தட்டியும் திறக்கப்படாததால், சந்தேகமடைந்த தண்டாயுதபாணி, சிபிஎஸ்இ அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். அவா்கள் அங்கு சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு ஓா் அறையில் மகேஷ் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
திருமங்கலம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
உடற்கூறு பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.