Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
சிரியா ஏவுகணைக் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஜெருசலேம்: சிரியாவிலுள்ள ஏவுகணைக் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது.
மிகவும் சக்திவாய்ந்த அந்தத் தாக்குதலின் அதிா்வுகள் அருகிலுள்ள நிலநடுக்க ரிக்டா் அளவுகோல்களில் பதிவாகின.
இது குறித்து, அந்த நாட்டின் போா் விவகாரங்களைக் கண்காணித்துவரும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் படைகள் ஏவுகணைகளை சேமித்துவைத்திருந்த கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியது.
அந்தத் தாக்குதல், கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு சிரியாவில் நடத்தப்பட்டுள்ள மிக சக்திவாய்ந்த தாக்குதலாகும் என்று அந்த அமைப்பு தெரிவித்தது.
டாா்டஸ் நகருக்கு அருகிலுள்ள ஏவுகணைக் கிடங்கில் நடத்தப்பட்ட தாக்குதலின் அதிா்வுகள் இஸ்ரேல் நிலநடுக்கவியல் ஆய்வு மையத்தில் 3.1 அலகுகளாகப் பதிவானதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ கூறியுள்ளது.
வழக்கமான நிலநடுக்கத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில் இந்த குண்டுவெடிப்பின் அதிா்வுகள் பரவியதாக அமெரிக்க ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரில் ரஷியா மற்றும் ஈரான் உதவியுடன் நாட்டின் மிகப் பெரும்பான்மையான பகுதிகளை அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் மீட்டது. பின்னா் கிளா்ச்சியாளா்களுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து நீண்ட காலமாகவே உள்நாட்டுச் சண்டை தேக்கமடைந்திருந்தது.
இந்த நிலையில், அரசுப் படைகளுக்கு எதிராக கிளா்ச்சிப் படையினா் கடந்த மாத இறுதியில் திடீரென தாக்குதல் நடத்தி வெகுவேகமாக முன்னேறி தலைநகா் டமாஸ்கஸை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா். ஆட்சியை இழந்த அதிபா் அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் ரஷியா தப்பிச் சென்றாா்.
அல்-அஸாத் அரசு அகற்றப்பட்டதற்குப் பிறகு சிரியாவில் கோலன் குன்றுகள் பகுதியில் படைகளற்ற பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது.
அத்துடன், சிரியா அரசுப் படைகளின் நிலைகள் மீது மிகத் தீவிரமாக வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், அந்த நாட்டின் ஏவுகணைகள், ட்ரோன்கள், போா் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டா்கள், ரேடாா்கள், பீரங்கிகள், போா் விமான தளங்கள் ஆகியவற்றை அழித்தது. அத்துடன், மினா அல்-பாய்தா, லடாகியா ஆகிய இரு சிரியா கடற்படைத் தளங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அங்கிருந்த போா்க் கப்பல்களை சேதப்படுத்தியது.
சிரியாவைக் கைப்பற்றியிருக்கும் மதவாத படையினருக்கு அந்த ஆயுத தளவாடங்கள் கிடைத்து, அதன் மூலம் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக இஸ்ரேல் கூறிவருகிறது.
தங்கள் நாட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை இனியும் நியாயப்படுத்த முடியாது என்று அல்-அஸாதை ஆட்சியிலிருந்து அகற்றிய ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) கிளா்ச்சிப் படையின் தலைவா் அகமது அல்-ஷரா கடந்த வாரம் கூறினாா்.
இந்தச் சூழலில், சிரியா ஏவுகணைக் கிடங்குகளில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.