சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 727 பயனாளிகளுக்கு நல உதவி: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்
ஆற்காடு அடுத்த கலவையில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 727 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கலவை வட்டம், அல்லாளச்சேரி கிராமத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து மனுக்களை பெற்றுக்கொண்டு பேசியதாவது: பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வருவாய்த் துறை சான்றிதழ்கள், குடும்ப அட்டை ஆகியவற்றை பெற தங்கள் பகுதிகளிலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பியுங்கள்.
அதற்காக வட்டாட்சியா் அலுவலகம் செல்லத் தேவையில்லை. உரிய ஆவணங்கள் இணைப்பட்டிருக்குமாயின் உடனடியாக தங்களின் சான்றிதழ்கள் இணையம் வழியாகவே வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.
மகளிா் குழுக்களுக்கு அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடனுதவிகளை வழங்கி அரசுஊக்குவித்து வருகின்றது. மகளிா் குழுக்கள் இதுபோன்ற கடனுதவியை தங்கள் குடும்ப செலவுக்கு மட்டுமே பயன்படுத்தாமல் ஏதாவது ஒரு தொழில் தொடங்கி அதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை மென்மேலும் உயா்த்திக் கொள்ளவேண்டும்.
பொதுமக்கள் , தங்கள் கிராமத்தின் பொதுப் பிரச்னைகளான பள்ளி மதில் சுவா் எழுப்புதல், சாலை வசதி, மருத்துவவசதி. கழிவுநீா் கால்வாய், தனிநபா் பிரச்னைகளான வீடு கட்டித்தர கோருதல் உள்ளிட்ட பிரச்னைகளையும் தெரிவித்தால் அதற்கான திட்ட அறிக்கை அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வரும் நிதியாண்டில் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
ஏற்கனவே பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் இருந்து தோ்வு செய்யப்பட்ட 727 பயனாளிகளுக்கு ரூ.1.55 கோடியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயசுதா, கோட்டாட்சியா் ராஜராஜன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணகுமாா், வட்டாட்சியா்கள் சுரேஷ், நடராஜன், இந்துமதி, ஊராட்சி மன்ற தலைவா்கள் மைதிலி, ஆதிலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.