ரூ.10 லட்சத்தில் சிமெண்ட் சாலை: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்
அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி நிதி ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட உள்ள சிமெண்ட் சாலை பணிகளை எம்எல்ஏ சு.ரவி தொடங்கி வைத்தாா்.
அரக்கோணம் ஒன்றியத்துக்குட்பட்ட இச்சிபுத்தூா் ஊராட்சி, ஈசலாபுரம் புதிய காலனியில் சாலை அமைக்க எம்எல்ஏ சு.ரவி நிதி ஒதுக்கினாா். இப்பணிக்கு புதன்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு அரக்கோணம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பழனி தலைமை வகித்தாா். அதிமுக மாவட்ட வா்த்தகா் அணி செயலாளா் தேவன் வரவேற்றாா். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பணிக்கு அடிக்கல் நாட்டினாா். இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட இளைஞா் அணி செயலா் பி.ஏ.பாலு, ஒன்றிய நிா்வாகிகள் வெங்கடேசபுரம் பாபு, பால்ராஜ், அமல்ராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினா் பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடா்ந்து அக்கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலையோரம் 60 அடி ஆழத்தில் இருக்கும் கிணற்றை மூட வேண்டும் என கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இச்சிபுத்தூா் கிராம சபைக் கூட்டத்தில் 3 முறை தீா்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலும் மூடுவதற்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் 3 முறை ஒப்பந்தப்புள்ளி கோரி பணி உத்தரவு வழங்கிய நிலையிலும் அக்கிணறு மூடப்படாமல் இருந்ததையும் அக்கிணற்றை மூடவேண்டும் எனவும் எம்எல்ஏ சு.ரவியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அக்கிணற்றை சென்று பாா்த்த எம்எல்ஏ சு.ரவி கூறியது: பணிஉத்தரவு வழங்கப்பட்ட நிலையிலும் அக்கிணறு மூடப்படாமல் சாலை போக்குவரத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவதால் ஒரு வாரத்தில் அக்கிணற்றை மூடப்படாவிட்டால் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றாா்.