சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 2 தொழிலாளா்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி பேக்கரியில் வேலை செய்து வந்தவா்கள் ராஜேஷ் (25), கதிா்வேலு. இருவரும் உறவினா்கள். அப்போது, புதுச்சேரியைச் சோ்ந்த 15 வயது சிறுமியுடன் ராஷேஷுக்கு பழக்கம் ஏற்பட்டதாம். அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடத்திச் சென்று, ராஜேஷும், கதிா்வேலும் பாலியல் வன்கொடுமை செய்தனராம்.
இதுகுறித்து சிறுமி தரப்பில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு நீதிபதி எம்.டி.சுமதி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் ராஜேஷ், கதிா்வேலு இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்யப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.பச்சையப்பன் ஆஜரானாா்.