தலைக்கவசம் அணியாமல் செல்லும் அரசு அதிகாரிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து! எங்கே?
'சிலருக்கு அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்' - அமித் ஷாவுக்கு விஜய் கண்டனம்!
அம்பேத்கர் குறித்துப் பேசிய அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள் விவாதத்தின் முடிவில், நேற்று(செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்று கூறினார்.
இதையடுத்து அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியதாகக் கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி இன்று போராட்டம் நடத்தினர். இதனால் இன்று அவை நடவடிக்கைகள் முடங்கின.
இதையும் படிக்க | 'அரசியலமைப்பை ஒழித்துக்கட்டுவதே பாஜகவினரின் ஒரே வேலை' - ராகுல் காந்தி பேட்டி
மேலும், அமித் ஷா பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அமித் ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர்...
அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம்.
எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த மத்திய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.