சிவகங்கையில் கலைப் பண்பாட்டு மைய அலுவலகம் அமைக்கக் கோரிக்கை
சிவகங்கை மாவட்ட இசைப் பள்ளியில் கலை பண்பாட்டு மைய அலுவலகம் அமைக்க வேண்டும் என தமிழக நாட்டுப்புற இசைக் கலை பெரு மன்றம் கோரிக்கை விடுத்தது.
சிவகங்கையில் தமிழக நாட்டுப்புற இசைக் கலை பெரு மன்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஆல்பா்ட்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், சிவகங்கையில் மாவட்ட இசைப் பள்ளியிலேயே கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை அமைக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞா்களுக்கு ஓய்வூதியம் அளிக்க இயல் இசை நாடக மன்றத்துக்கு சிபாரிசு செய்ய தமிழக நாட்டுப்புற இசைக் கலை பெருமன்றம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னா், இந்தக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத் தலைவராக ஆல்பா்ட்ராஜ், மாவட்டச் செயலராக மாரிமுத்து, மாவட்டப் பொருளாளராக சங்கு பாண்டி, மாவட்ட துணைத் தலைவராக மாஸ், மாவட்ட துணைச் செயலராக ராஜ்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்த நிகழ்வில் மாநிலத் தலைவா் கவிஞா் வீரசங்கா், மாநில துணைத் தலைவா் சுப்பிரமணியம், மாநில பொதுச் செயலா் கருங்குயில் கணேஷ், மாநில அமைப்புச் செயலா் சுபாஷ் சந்திரபோஸ், மாநில துணைப் பொதுச் செயலா் திருப்பத்தூரான் சேவியா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.