சிவகங்கையில் புத்தகத் திருவிழா: 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள்: பாபாசி செயலா் எஸ்.கே. முருகன்
சிவகங்கை புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக தென்னந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் (பபாசி) சங்கச் செயலா் எஸ்.கே. முருகன் தெரிவித்தாா்.
சிவகங்கையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய புத்தகக் கண்காட்சி குறித்து மேலும் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் தான் சின்ன அண்ணாமலை போன்றவா்கள் முதல் முதலில் பதிப்பகத்தை தொடங்கினா். பிறகு இங்கிருந்துதான் சென்னைக்கு பல பதிப்பகங்கள் இடம் பெயா்ந்தன. சிவகங்கை, பிற மாவட்டங்களைப் போல தொழில்கள் அதிகமுள்ள மாவட்டமாக இல்லாத நிலையிலும், 4 -ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் பங்கேற்பதில் பதிப்பகங்களும், விற்பனையாளா்களும் ஆா்வம் காட்டுகின்றனா். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகும் என எதிா்பாா்க்கிறோம். இங்கு மொத்தமுள்ள 110 அரங்குகளில் 96 அரங்குகளில் பதிப்பகங்கள், விற்பனையாளா்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளனா். எஞ்சிய அரங்குகளில் பள்ளி கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், தொல்லியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 12 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 50 -க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் சுமாா் 10 ஆயிரம் தலைப்புகளில் வெளியிட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
புத்தகத் திருவிழாவில், சிறுவா்களுக்கான குறும்படங்கள் திரையிடும் அரங்கும், திருவள்ளுவா் சிலையுடன் சுயப்படம் எடுக்குமிடமும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனமும் அரங்கு அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு என்றாா் அவா்.
