திமுகவை ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கி எறிவார்கள்: எல். முருகன்
சிவகங்கை அருகே செம்பனூரில் ஜல்லிக்கட்டு: 22 போ் காயம்
சிவகங்கை அருகே செம்பனூரில் மாசிக் களரியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு மைதானத்தில் அரசு வழிகாட்டுதலின்படி மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள், விழாக் குழுவினா் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவா் பி. ராஜசேகா் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதைத் தொடா்ந்து, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 710 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. ஒரு சுற்றுக்கு 50 வீரா்கள் என 300 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா்.


பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரா்களுக்கு பிடி கொடுக்காமல் களத்தில் நின்று விளையாடின. போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்களுக்கு இரு சக்கர வாகனம், கட்டில், அலமாரி, மேஜை, பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
காளைகள் முட்டியதில் காயமைடந்த 22 பேருக்கு செம்பனூா் சுகாதார மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். இவா்களில் இருவா் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஜல்லிக்கட்டையொட்டி, நகா் காவல் துணை கண்காணிப்பாளா் அமலஅட்வின் தலைமையில் 100 -க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.