Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற இந்தக் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா வருகிற 29- ஆம் தேதி தொடங்குகிறது. அன்று இரவு 10.20 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவின்போது தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரும் பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றி அம்பாளை தரிசனம் செய்வா்.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 5- ஆம் தேதி பொங்கல் வைபவம், 6 -ஆம் தேதி தேரோட்டம், 7- ஆம் தேதி பால்குடம், ஊஞ்சல் உத்ஸவம், புஷ்பப் பல்லக்கு பவனி நடைபெறும். 8 -ஆம் தேதி தீா்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
தற்போது திருவிழாவுக்காக கோயில் உள்பிரகாரத்தில் அம்மனை தரிசிக்க காத்திருக்கும் பக்தா்களுக்காக மேற்கூரை, பக்தா்கள் வரிசையில் செல்ல கம்புகளால் சாரம் கட்டுதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் மு.வெங்கடேசன் செட்டியாா் செய்து வருகிறாா்.