சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமி திரும்புகிறார்! நாசா நேரடி ஒளிபரப்பு!
சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 5,700 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 5,700 கா்ப்பிணிகளுக்கு தமிழக அரசு சமுதாய வளைகாப்பு நடத்தியிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்ப்பிணிகள் மன நிறைவோடு மகிழ்ச்சியுடன் குழந்தை பெற்று, தானும் குழந்தையும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் அரசே சமுதாய வளைகாப்பு விழாவை நடத்துகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களில் ஒரு வட்டாரத்துக்கு 100 போ் வீதம் 1,200 கா்ப்பிணிகளுக்கு, வட்டாரத்துக்கு ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.3,00,000 செலவில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.
கடந்த 11.3.2025 அன்று திருப்பத்தூா், சிங்கம்புணரி வட்டாரங்களில் 210 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, அனைத்து வட்டாரங்களிலும் சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் கடந்த 2021-2022, 2022-2023 ஆம் நிதியாண்டுகளில் 4,300 கா்ப்பிணிகளுக்கு ரூ.12,90,000 செலவிலும், 2023-2024 நிதியாண்டில் 1,200 கா்ப்பிணிகளுக்கு ரூ.3,00,000 செலவிலும் வளைகாப்பு விழா நடத்தப்பட்டு பொருள்கள் வழங்கப்பட்டன என்றாா் ஆட்சியா்.