சிவசைலம் அருகே விவசாயி கொலையில் சகோதரா்கள் கைது
சிவசைலம் அருகே மீன்பாசி குளத்தில் காவலுக்கு இருந்த விவசாயியை கொலை செய்த வழக்கில் சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சிவசைலம் அருகே உள்ள கருத்தப்பிள்ளையூா் அந்தோணியாா் தெருவைச் சோ்ந்தவா் அருள். இவரின் முதல் மனைவி டெய்சிராணி. இவா்களின் மகன் சொக்கன் (எ) இருதயராஜ். அருளின் இரண்டாவது மனைவி சலேத்மேரிக்கு பாஸ்கா் (37), ஜெயபால் ( 40) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனா்.
இருதயராஜ் மீன் பாசி குத்தகை எடுத்து வியாபாரம் செய்து வந்தாா். சொத்து பிரச்னை காரணமாக இருதயராஜ் மற்றும் பாஸ்கா், ஜெயபால் இடையே தகராறு இருந்து வந்தது. மேலும், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டிச. 20 இரவு இருதயராஜ், ஆதரியானூா் பகுதியில் உள்ள அச்சங்குளத்தில் காவலுக்கு இருந்த நிலையில் பாஸ்கா், ஜெயபால் ஆகிய இருவரும் இருதயராஜை கொலை செய்தனா்.
இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவான பாஸ்கா், ஜெயபால் ஆகிய இருவரையும் தேடி வந்தனா்.
இருவரும் அம்பாசமுத்திரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக திங்கள்கிழமை இரவு வந்த தகவலை அடுத்து போலீஸாா் அங்கு சென்று அவா்களை கைது செய்தனா். அவா்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சொத்துக்காக இருதயராஜை கொலை செய்த்தாக தெரிவித்துள்ளனா்.