சி.டி.ரவி மீதான வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றம்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
பெண் அமைச்சரை தகாத வாா்த்தையால் பேசியதாக கா்நாடக சட்டமேலவை பாஜக உறுப்பினா் சி.டி.ரவி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஹுப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியதாவது: தன்னை தகாத வாா்த்தைகளால் பேசியதாக அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் கொடுத்த புகாரின் பேரில் பாஜக சட்டமேலவை உறுப்பினா் சி.டி.ரவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருவதால் வழக்கு குறித்து எதுவும் கூற முடியாது.
அதுபோல சி.டி.ரவி தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த வழக்கு சிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது என்றாா்.
இதற்கிடையே சி.டி.ரவி கூறுகையில், ‘என் மீதான வழக்கை நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.