செய்திகள் :

சீனாவின் ராஜதந்திரம் : அமெரிக்கா மீது ஆதிக்கம் செலுத்தும் சீனா?

post image

சமேரியம், கடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், ஸ்காண்டியம், லூட்டேஷியம், இட்ரியம்... வாயிலேயே நுழையாத இந்தப் பெயர்கள் என்ன என உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். இவை அரியவகை கனிமங்கள். இப்படி 17 கனிமங்களைக் கொண்ட ஒரு தொகுதி, அரிய பூமி கனிமங்கள் (rare earth elements) எனப்படுகின்றன. இவற்றைக் காரணமாக வைத்து, அமெரிக்காவுக்கு சீனா தண்ணி காட்டுவதுதான் தற்போதைய பரபரப்பு.

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக வரி விதிப்பதாக கடந்த ஏப்ரலில் அறிவித்தார். இதில் கடுப்பான சீனா, இந்த அரிய வகை கனிமங்களை வெளிநாடுகளுக்கு விற்பதில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. முழுமையாக ஏற்றுமதியை நிறுத்தாமல், இதை சாமர்த்தியமாகச் செய்தது. அதாவது, இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சிறப்பு லைசென்ஸ் வாங்க வேண்டும். ஆனால், அந்த லைசென்ஸை யாருக்கும் தர மாட்டார்கள்.

இதனால் உலகின் பல நாடுகள் ஆடிப்போயின. குறிப்பாக, அமெரிக்கா. காரணம், உலகம் முழுதும் பயன்படும் இந்த வகையிலான கனிமங்களின் 90% இறக்குமதி சீனாவிடமிருந்துதான் எல்லா நாடுகளுக்கும் சென்றது. வாயில் நுழையாத பெயர் கொண்ட இந்தக் கனிமங்கள்தான், நவீனத் தொழில்நுட்ப உலகில் நாம் பயன்படுத்தும் பல பொருள்களுக்கு ஆதாரம். செல்போன், கம்ப்யூட்டர் தொடங்கி எலெக்ட்ரிக் கார்கள், போர் விமானங்கள் வரை இவற்றின் பயன்பாடு விரிகிறது.

18-ம் நூற்றாண்டிலும் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, இவை மிகக் குறைந்த அளவில்தான் காணப்பட்டன. அதுவும் அரிதான தாதுப் பொருள்களில் மட்டுமே இவை இருந்தன. தங்கம் போலவோ, இரும்பு போலவோ, இவை அடர்த்தியான விதத்தில் கிடைத்ததில்லை. இப்போது முன்பை விட அதிகம் கிடைத்தாலும், அவற்றைப் பிரித்தெடுப்பதும், சுத்தம் செய்வதும் நேரம் மற்றும் செலவு பிடிக்கும் சிக்கலான விஷயம்.

ஆனால் இவைதான் மிக அதிகமாக இன்று பயன்படுகின்றன. மின்சார மோட்டார் பொருத்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அதற்குள் இருக்கும் மிக உறுதியான காந்தங்களில் பயன்படுத்தப்படுவது இந்த அரிய தனிமங்கள்தான். குறிப்பாக மின் வாகனங்கள், எல்.இ.டி. விளக்கு, ஏவுகணை, ஸ்மார்ட் போன், லேப்டாப், டி.வி., ரேடார், சூரிய மின்கலம், எம்.ஆர்.ஐ சோதனை, புற்றுநோய் சிகிச்சை, வாக்குவம் கிளீனர் என்று பலவற்றுக்கும் இந்த அரிய கனிமங்கள் தேவைப்படுகின்றன. அதாவது மின்னணுத் துறை, ராணுவம், மருத்துவம், பசுமை எரிபொருள் போன்ற பல பிரிவுகளிலும் இன்றியமையாதவை ஆகிவிட்டன அரிய கனிமங்கள்.

சீனா இந்தக் கனிமங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்தியவுடன், பல நாடுகளின் பல தொழில்கள் - குறிப்பாக கார் தயாரிப்பு - பெரிதும் அடிவாங்கியது. அமெரிக்காவின் பாதுகாப்பு, தானியங்கி மற்றும் தொழில்நுட்பத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் செயல்பட்டுவந்த தனது ஒரு கார் தொழிற்சாலைப் பிரிவை போர்டு நிறுவனம் மூடியது.

ஐரோப்பிய நிறுவன தலைவர் உர்சுலா லெயென், சீனாவின் இந்த ஆதிக்கம் மற்றும் பிளாக்மெயில் உத்தி குறித்து உறுமியிருக்கிறார். சீனாவின் புதிய ஆயுதம் அதற்குப் பலனளிக்கும் வகையில் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது.

‘தொழில்நுட்ப முன்னேற்றமடைந்த சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது' என்று அமெரிக்கா ஏற்கெனவே முடிவெடுத்துச் செயல்படுத்தி வந்தது. சீனா தனது அரிதான தனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திக்கொண்டதும், அவசர அவசரமாக என்விடியா நிறுவனத்தின் சில சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா அனுமதித்தது. இப்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியாவுக்குமான ஏற்றுமதியை சீராக்கியுள்ளது சீனா. அமெரிக்கா முழுமையாக இன்னும் பலன் பெறவில்லை.

ஆனால் சீனாவின் ‘அரிதான கனிமங்கள் ஏற்றுமதி தடை’ ஆயுதம் நீண்டகாலத்திற்கு பலன் அளிக்குமா என்பது கேள்விக்குறிதான். இவற்றை உருவாக்க மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கிவிட்டன நிறுவனங்கள்.

பிரச்னை என்னவென்றால், சீனாவில் இத்தகைய கனிமங்கள் உலக அளவில் கிடைப்பதில் பாதி அளவுதான் உள்ளன. என்றாலும் இவற்றின் வருங்காலத் தேவையை முன்கூட்டியே யூகித்து சீனா பல செயல்களை புத்திசாலித்தனமாகச் செய்திருக்கிறது. குறிப்பாக, பல ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளோடு பல ஒப்பந்தங்களை சீனா செய்துகொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக நைஜீரியாவில் உள்ள மோனோசைட் மணலை (இதில் செரியம், லான்தனம் போன்ற அரிதான கனிமங்கள் உள்ளன) அந்த நாடு சீனாவுக்கு அனுப்ப வேண்டும். தவிர, நைஜீரியாவில் அரிய கனிமங்களுக்கான சுரங்கங்களைத் தோண்டும் வேலையைச் செய்ய சீனா அனுமதிக்கப்படும். அந்த நாட்டிலிருந்து சுத்திகரிக்கப்படாத நிலையில் சீனாவுக்கு அவை அனுப்பி வைக்கப்படும். அதை சீனா சுத்திகரித்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்.

இதற்கு பதிலாக நைஜீரியாவில் ரயில் பாதைகள், மின் நிலையங்கள் போன்றவற்றை சீனா கட்டித்தரும் என ஒப்பந்தம்.

இந்த வகை ஒப்பந்தங்களெல்லாம் 1990களிலேயே கையெழுத்தாகி உள்ளன. இதுபோல மாலாவி, தான்சானியா, மடகாஸ்கர், காங்கோ போன்ற பல நாடுகளுடன் சீனா ஒப்பந்தம் செய்திருக்கிறது.

மேலும் பல யுக்திகளின் மூலம் உலகின் 90 சதவிகித சந்தையை சீனா கைப்பற்றி இருக்கிறது. பல நாடுகள் தங்கள் அரிய பூமி கனிமங்களைச் சுத்திகரிக்க சீனாவை நம்பியுள்ளன. மேற்படி கனிமங்கள் குறிப்பாக மங்கோலியாவின் உட்புறமும் தெற்கு சீனாவிலும் அதிகம் காணப்படுகின்றன.

சுரங்கங்கள் தோண்டுவதன் மூலம் இந்தக் கனிமங்கள் அடங்கிய தாதுப் பொருள்களை வெளியே எடுப்பது என்பது ஒரு பகுதிதான். அவற்றைச் சுத்திகரிப்பது என்பதுதான் பெரிய விஷயம். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு இதைக் கைவரப் பெற்றது சீனா. தொடக்கத்தில் இந்தச் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு மிக அதிக அளவில் மானியங்கள் கொடுத்தது சீன அரசு. அதிகம் மெனக்கெட வேண்டும் என்பதாலும், சுற்றுச்சூழல் பாதிப்பு என்கிற கோணத்திலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகள் இந்த வகை சுத்திகரிக்கும் தொழிற்சாலைகளை அதிகம் உருவாக்கவில்லை. சீனா அதுபற்றிக் கவலைப்படாமல் சுத்திகரிக்கும் தொழிற்சாலைகளை அதிக அளவில் உருவாக்கியது.

தொடக்கத்தில் உலக சந்தையில் விற்கப்படும் விலையைவிட குறைவான விலையில் சுத்திகரிக்கப்பட்ட அரிதான கனிமங்களை விற்று சந்தையைக் கைப்பற்றியது சீனா. இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் பல சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை உண்டானது. குறிப்பாக, கலிபோர்னியாவிலுள்ள மவுண்டன் பாஸ் சுரங்கம் மூடப்பட்டது. சுத்திகரிக்கப்படாத அரிதான கனிமங்களை ஏற்றுமதி செய்து, சுத்திகரிக்கப்பட்ட அரிதான கனிமங்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியது அமெரிக்கா. இப்போதைக்கு உலகில் எந்தச் சுரங்கத்தில் அரிதான கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை சுத்திகரிப்புக்கு சீனாவுக்குத்தான் அனுப்ப வேண்டும் என்ற நிலை பெருமளவு உருவாகியிருக்கிறது.

இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் அரிய பூமி கனிமங்கள் உள்ளன. ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் இவை இருப்பதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியன் ரேர் எர்த் லிமிடெட் (IREL) நிறுவனம், இதுதொடர்பான சுரங்கம் மற்றும் செயலாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சீனாவுக்கு மாற்றாக, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் அரிய கனிமங்கள் விநியோகச் சங்கிலியை உருவாக்கக் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. (ஏற்கெனவே 2010-ல் இந்தக் கனிமங்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதை சிறிது காலத்துக்கு சீனா நிறுத்தியது!). இருப்பினும் சவால்களும் உள்ளன. குறிப்பாக இந்தக் கனிமங்களைப் பிரித்தெடுப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதிக செலவு போன்றவை.

இந்தியாவும் இந்தக் கனிமங்களின் முக்கிய உற்பத்தியாளர்களில் ஒன்று என்றாலும், இவற்றைச் சுத்திகரிப்பதில் சீனா உலக சந்தையில் இன்னமும் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. அதனால்தான் சீனா கடுமை காட்டியதும், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு சரிவை சந்தித்தது.

எதிலுமே ஒரு நாட்டின், ஒரு நிறுவனத்தின் ஆதிக்கம் இருப்பது ஆபத்தானது!

Congress support இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் ஆட்சியமைக்க முடியாது - Data Head Praveen Chakravarty

2026ல்- விஜய் புதிதாக களமிறங்குவதால் அரசியல் சூழல் முன்பைப் போல் இல்லாமல் மாறியுள்ளது. விஜய் எந்தளவுக்கு தாக்கம் செலுத்துவார் என்று எழும் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கணிப்புகளை கூறுகின்றனர்... மேலும் பார்க்க

``மழைநீர் கால்வாயில் கலக்கும் சாக்கடை நீர்'' - சுகாதார சீர்கேட்டால் அவதிப்படும் சோழவரம் மக்கள்

புழல் ஏரிகடலே பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்குப் பரப்பளவு கொண்ட ஏரிதான் நம்ம புழல் ஏரி. இந்த ஏரியில் தண்ணீர் இல்லாமல் போனால், சிங்காரச் சென்னையே தத்தளித்துவிடும். மழை பெய்யும் போது புழல் ஏரியைச் சுற்... மேலும் பார்க்க

தவெக: "எழுதிக்கொடுக்கும் சினிமா டயலாக்கை சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதை மக்கள் விரும்பவில்லை" - அப்பாவு

நெல்லையில் குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பான அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் முதல் மொழி தமிழ். தொட... மேலும் பார்க்க

``கட்டுறாங்க, கட்டுறாங்க 15 வருசமா பாலத்தை கட்டுறாங்க'' - குமுறும் திருமுல்லைவாசல் கிராம மக்கள்

திருமுல்லைவாசல்மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சியில் உப்பனாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியானது மாநில நெடுஞ்சாலைத்துறையால் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2007-ல் தொடங்கப்பட்... மேலும் பார்க்க

செங்கோட்டையனின் கோட்டையில் எடப்பாடிக்கு பிரமாண்ட வரவேற்பு- என்ன நடக்கிறது ஈரோடு அதிமுக-வில்?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 9-ஆம் தே... மேலும் பார்க்க

TVK: கண்டுகொள்ளாத விஜய்; திடீரென அட்டாக் செய்யும் அதிமுக - காரணம் என்ன?

விஜய்யின் சனிக்கிழமை பிரசாரங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கின்றன. கடந்த சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். லோக்கல் பிரச்னைகளை... மேலும் பார்க்க