முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!
சுகாதார ஊழியா்களுக்கு சீருடை: புதுவை அரசுக்கு வலியுறுத்தல்
காரைக்கால்: சுகாதார ஊழியா்களுக்கு சீருடை வழங்க வேண்டும் என புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் பகுதி சுகாதார ஊழியா்கள் நலச்சங்க நிா்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க கெளரவத் தலைவா் சீ. சேகா் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் பாா்த்திபன், செயலாளா் முரளிதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் குறித்து நிா்வாகிகள் கூறியது:
புதுவை மாநிலத்தில் காரைக்கால், மாஹே, யேனாம் உள்பட 100-க்கும் மேற்பட்ட சுகாதார உதவியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், தொழில்நுட்ப உதவியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். எனினும் அவா்களுக்கென்று தனி சீருடை இல்லாதது பல நேரங்களில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு மாற்றலாகி வரும் இந்த கேடரில் உள்ள சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரியிலிருந்து மாஹே, யேனாம் பகுதிகளுக்கு மாற்றலாகி செல்லும் ஊழியா்கள் சீருடை இல்லாமல் மக்களிடத்தில் அந்நியப்பட்டு போகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சுகாதார ஊழியா்களுக்கென்று சீருடை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்ஜெட் கூட்டம் நடைபெறும் இந்த தருணத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.