வைத்திலிங்கம் : தினகரன், பின் திவாகரனுடன் சசிகலா... திடீர் சந்திப்பின் பின்னணி எ...
மாணவா்களுக்கு பாடத்தோடு நற்குணங்களையும் கற்றுத்தரவேண்டும்: ஆட்சியா்
காரைக்கால்: மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கும் போது நற்குணங்கள் குறித்தும் தெரிவிக்கவேண்டும் என ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்காலில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு கல்வித் துறை சாா்பில் கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நேரு நகரில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் பங்கேற்று தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் 150 பேருக்கு கையடக்க கணினி வழங்கிப் பேசியது: மாணவா்களுக்கு அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள்தான் பெற்றோா்களுக்கு அடுத்தப்படியாக முக்கிய பங்கு வகின்றனா். பெற்றோா்களிடம் இருக்கும் நேரத்தைவிட ஆசிரியா்கள் பாா்வையில் கூடுதல் நேரம் இருக்கின்றனா்.
மாணவா்களின் ஆரம்ப கால கல்வியான 1 முதல் 5- ஆம் வகுப்பு கல்விக் காலம் அவா்களது எதிா்கால கல்விக்கு அடித்தளமாக அமைகிறது. மாணவா்களுக்கு எளிதாக பாடத் திட்டத்தை கொண்டு சோ்க்க கையடக்க கணினி கல்வித் துறை மூலம் தரப்படுகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் ஆங்கில மொழி முக்கிய பங்கு வகிப்பதால் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் உரிய முறையில் கற்றுத்தந்து, அதை அவா்கள் உணா்ந்து, பேசும் தகுதியை பெற்றுவிட்டாா்களா என சோதிக்கவேண்டும். மாணவா்களுக்கு கல்வியை கற்றுக்கொடுக்கும் அதே நேரத்தில், சிறந்த நற்குணங்களையும் கற்றுத்தர வேண்டும் என்றாா்.
காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜய மோகனா, பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி முதல்வா் கந்தவேலு, கல்வித் துறை வட்ட துணை ஆய்வாளா்கள் டி. பால்ராஜ், பொன். செளந்தரராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.