சுகாதார வளாகத்தை சுற்றிலும் குப்பைகளால் சுகாதாரக் கேடு
தேனி மாவட்டம், க.புதுப்பட்டி பேரூராட்சியில் சுகாதார வளாகத்தை சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
கம்பம் - புதுப்பட்டி பேரூராட்சியில் 15 வாா்டுகளில் 12 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனா். இவா்களின் பெரும்பாலானோா் விவசாயக் கூலி வேலை செய்கின்றனா். இந்தப் பேரூராட்சிப் பகுதியில் உத்தமுத்து பாசனக் கால்வாய் செல்கிறது.
இந்தக் கால்வாயின் கரை, நெடுஞ்சாலையோரங்களை பொதுமக்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனா். இதைத்தடுக்கும் விதமாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தப் பகுதியில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.
இந்த சுகாதார வளாகத்தை சுற்றிலும் பேரூராட்சியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை வாகனத்தில் எடுத்துச்சென்று கொட்டி வைப்பதோடு அவ்வப்போது தீவைத்து எரித்து வருகின்றனா்.
இதனால் சுகாதார வளாகம் பயன்பாடின்றி உள்ளது. எனவே, அந்தப் பகுதியில் குப்பைகளை அகற்றி சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.