சுனிதா வில்லியம்ஸை மீட்பதில் மீண்டும் தாமதம்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் மாதக்கணக்கில் சிக்கியுள்ள வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்பட இரு அமெரிக்க விண்வெளி வீரர்களை மீட்கும் பணி மீண்டும் தாமதமாகியுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளியிலுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் பணி நிமித்தமாக எட்டு நாள் பயணமாக சென்றனர்.
ஆனால், அந்த விண்கலத்தின் இயந்திர கோளாறு காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவர்கள் இருவரும் இல்லாமல் விண்கலத்தை மட்டும் திரும்ப வரவழைக்க நாசா முடிவு செய்தது.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் இருவரையும் மீட்டு பூமிக்கு கொண்டு வர, எலன் மஸ்கின் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் க்ரு-9 எனும் இரண்டு விண்வெளி வீரர்களுடன் கூடிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழு கடந்த செப்டம்பர் மாதம் இரண்டு காலி இருக்கைகளுடன் டிராகன் விண்கலத்தில் அந்த விண்வெளி மையத்தை அடைந்தது. இந்த நால்வரும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவதாக இருந்தனர்.
அவர்கள் அப்படி திரும்ப வேண்டுமென்றால், சர்வதேச விண்வெளி மையத்தில் அவர்கள் பார்க்கும் பணியை வேறொரு குழு (க்ரூ-10) தொடர வேண்டும்.
இந்நிலையில், அந்த குழுவின் (க்ரூ-10) விண்வெளிப் பயணம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரையில் சாத்தியமில்லை என நாசா நேற்று (டிச.17) தெரிவித்தது.
இதனால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோரின் 8 நாள் பயணம் 9 மாதத்திற்கும் மேலாக நீடிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.