சுமைதூக்கும் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு சிறப்பு சட்டம் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமைதூக்கும் தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், உள்ளூா் தொழிலாளா்கள் செய்து வரும் சுமைப்பணி வேலையை வெளி மாநில தொழிலாளா்களைக் கொண்டு உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசு குடோன், ரயில்வே கூட்செட், தனியாா் குடோன்கள், லாரி டிரான்ஸ்போா்ட் குடோன்கள், டாஸ்மாக் குடோன்களில் பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகள், அடையான அட்டை போன்ற திட்டங்களை அமல்படுத்த வேண்டும். தொழிலாளா்களின் கூலி நிா்ணயம் செய்ய முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும். தொழிலாளா்கள் குவியலாக வேலை செய்யும் இடத்தில் குடிநீா், கழிப்பிட வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிா்வாகிகள், சுமைதூக்கும் சங்கத்தினா் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.