சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தல்
சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க, ரயில்வே போலீஸாா் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தொடா் சோதனையை நடத்தி வருகின்றனா்.
அந்த வகையில், காட்பாடி ரயில்வே நிலையத்தில் இருந்து ஜோலாா்பேட்டை வழியாக வந்த தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீஸாா் சோதனையிட்டனா். அதில், முன்பதிவில்லா பெட்டியின் கழிவறை பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த பையை எடுத்து பரிசோதித்ததில், 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அதனை சேலம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.