Inbox 2.0 : Eps 29 - Coolie Teaser-காக வீடியோவை தள்ளி வச்சிட்டோம்?! | Cinema Vik...
சுரங்கப் பாதை அமைப்பதாக உறுதி: பொதுமக்கள் போராட்டம் வாபஸ்
நத்தம்பட்டி அருகேயுள்ள எஸ்.அம்மாபட்டியில் நான்கு வழிச்சாலையில் சுரங்கப் பாதை அமைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தைத் தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி முதல் விருதுநகா் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் வரை தற்போது உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இதில் எஸ்.அம்மாபட்டி விலக்கில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் எளிதாக சாலையை கடக்கும் வகையில், சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், இந்தப் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்காமல் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி, இன்று (டிச. 4) மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனா்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை வத்திராயிருப்பு வட்டாட்சியா் அலுவலகத்தில், வட்டாட்சியா் சரஸ்வதி தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் ஜனவரி முதல் வாரத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப் பூா்வமாக தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டத்தை கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
இதில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுபாண்டியன், எஸ்.அம்மாபட்டி ஊராட்சித் தலைவா் நாகராஜ், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.