சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் - முதல் நாளில் மூவர் வேட்புமனுத் தாக்கல்!
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ஈரோடு கிழக்குத் தொகுதி மூன்றாவதாக தேர்தலைச் சந்திக்கவுள்ளது. 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த 2023-இல் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்மையில் அவரும் உயிரிழந்ததை அடுத்து, தற்போது மீண்டும் இடைத்தேர்தலை ஈரோடு கிழக்குத் தொகுதி சந்தித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. முதல்நாளான இன்று 247-ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடும் தேர்தல் மன்னன் பத்மராஜன் முதல் ஆளாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து, கரூர் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மதுரை விநாயகம் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நியாமான முறையில் நடைபெறவேண்டும். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக கூறி கோவையைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் இறுதிச் சடங்கு செய்யும் வகையில் மண் சட்டி, சேவண்டி, சங்கு, பால் ஆகியவற்றை கொண்டு வந்து சாலையில் வைத்து அபிஷேகம் செய்த பின் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
முதல் நாள் வேட்புமனுத் தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவுற்றது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் பேசுகையில், "முதல் நாளான இன்று மூன்று பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். பொங்கல் விடுமுறை காரணமாக ஜனவரி 13 மற்றும் 17 -ஆம் தேதி வேட்புமனுக்கள் பெறப்படும்" என்றார்.