இபிஎஸ் கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார்: அமைச்சர் கே.என...
சூனியம் வைத்தாக ஒருவர் அடித்துக் கொலை: ஒடிசாவில் அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி!
ஒடிசாவில் கஜபதி மாவட்டத்தில் சூனியம் வைத்ததாக ஒருவரைக் கிராமத்தினர் அடித்துக் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 28ஆம் தேதி இரவு மாவட்டத்தில் உள்ள மோகனா காவல் எல்லைக்குள்பட்ட குசும்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
இறந்த கருணாகரின் உறவினர் பெண் சபிதா, மோகனா காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஜூலை 28ல் இரவு 6 மணியளவில் சிலர் கருணாகரை அழைத்துச் சென்றனர். அப்போதிலிருந்து அவரை காணவில்லை. நான் விசாரித்தபோது, கிராமவாசிகள் அவரை அடித்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கஜபதி எஸ்பி ஜதீந்திர குமார் பாண்டா கூறுகையில்,
முதற்கட்ட விசாரணையில், கருணாகர் கிராம மக்களுக்கு ஆயுர்வேதம் போன்ற மருந்துகளைப் பரிந்துரைத்தது கண்டறியப்பட்டது. 15, 20 நாள்களுக்கு முன்பு 12 வயது சிறுவனுக்கு நாய் கடித்த நிலையில், கருணாகர் சில மருந்துகளைப் பரிந்துரைத்தார். சில நாள்களுக்குப் பிறகு அந்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.
சிறுவனின் மரணம் மற்றும் சமீபத்தில் நடந்த இதேபோன்ற சில சம்பவங்களால் இவர் சூனியம் வைப்பவர் என்று மக்கள் கருதினர். இதையடுத்து கோபமடைந்த கிராமத்தினர் 12 பேர் கொண்ட குழு கருணாகரை அடித்துக் கொன்று, அருகிலுள்ள காட்டில் அவரது உடலைப் புதைத்தனர். இந்த சம்பவம் குறித்து கிராம மக்களுக்குத் தெரிந்திருந்தாலும், அவர்கள் அதை யாரிடமும் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து போலீஸார் கருணாகரின் உடலை ஒரு காட்டிலிருந்து மீட்டனர். இதுதொடர்பாக எட்டு பேர் இதுவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.
கடந்த சில நாள்களில் மோஹனா காவல் எல்லையில் பதிவான இரண்டாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மலசபதர் கிராமத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் 35 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டார். கிராமவாசிகள் அந்த நபரை கழுத்தை நெரித்து கொன்று, அவரது அந்தரங்க உறுப்புகளை வெட்டி, அருகிலுள்ள ஹரபாங்கி அணையில் வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நீர்த்தேக்கத்தில் இருந்து சடலத்தை போலீஸார் மீட்டு, குற்றம் தொடர்பாக சில கிராம மக்களைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.