சூலூரில் கழிவுப் பஞ்சு குடோனில் தீ விபத்து: 70 லட்சம் ரூபாய் சேதம்
சூலூர்: கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் பஞ்சு குடோனில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.
கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான கழிவுப் பஞ்சு குடோன் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் கலங்கல் சாலையில் உள்ளது.
இங்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டு, தீயணைப்புத் துறையினரால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்களும் அருகில் இருந்தவர்களும் தீயை அணைக்க முயன்ற போதிலும், பலமாக வீசிய காற்றால் தீ வேகமாகப் பரவியது.

கடற்படையில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மருத்துவ உதவியாளர் பணி
தகவலறிந்து வந்த சூலூர், கருமத்தம்பட்டி, பீளமேடு ஆகிய இடங்களிலிருந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் தீயை அணைக்க கடுமையாகப் போராடி வருகின்றன.
இருப்பினும் ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள கழிவுப் பஞ்சு, ரூ.20 லட்சம் மதிப்பிலான பஞ்சு பிரிப்பு இயந்திரங்கள் மற்றும் குடோன் கட்டடம் முற்றிலும் எரிந்து நாசமாயின. மெத்தை, தலையணை தயாரிப்புக்கு பயன்படும் இந்தப் பஞ்சுகளால் ஏற்பட்ட சேதம் ரூ. 70 லட்சத்தைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குடோனில் 75 டன் கழிவுப் பஞ்சு சேமிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
முந்தைய தீ விபத்தின் சேதத்தை காப்பீடு நிறுவனம் ஆய்வு செய்யவிருந்த நிலையில் இந்தப் புதிய தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து குறித்து சூலூர் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.