செய்திகள் :

"நாலாவதா ஒரு பொம்பள புள்ள பெத்துக்காம விட்டுட்டேன்..." - தள்ளுவண்டி கடைக்காரர் இன்பவள்ளியின் கதை

post image

சென்னை வாலாஜாபாத் சாலை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு பெரிய பெரிய கார்களும், பைக்குகளும் வருவதும் போவதுமாக இருக்க, ஸ்டேடியத்திற்கு வெளியே சாமானிய மக்கள், கூட்டமாக ஒரு தள்ளுவண்டிக் கடையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடன் என்னையும் இணைத்துக் கொண்டேன்.

50 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா உணவுகளை பார்சல் செய்து கொண்டிருக்க 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஆம்லெட் ஊற்றிக்கொண்டிருந்தார்.

வாடிக்கையாளர்கள் உணவுகளைத் தட்டில் வாங்கிக் கொண்டு அங்கிருந்த நடைபாதையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

உணவு தயாரிக்கும் இன்பவள்ளி
உணவு தயாரிக்கும் இன்பவள்ளி

'தம்பி, சாம்பார், சட்னி எதுவும் வேணுமா' என ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை வாடிக்கையாளர்களை வாஞ்சையுடன் கவனிக்கிறார் அந்தப் பெண்.

நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களிடம் ஒரு பெரியவர் வந்து கை ஏந்தினார். 'அண்ணே, கஸ்டமர்கிட்ட கேட்டு தொல்ல பண்ணாத. என்னைக்காவது ஒரு நாள் உன்ன பட்டினி போட்டுருக்கேனா, என்கிட்ட கேளு' எனப் பேசிக்கொண்டே, நாலு இட்லியைத் தட்டில் வைத்து அந்த பெரியவரிடம் சாப்பிட கொடுக்கிறார்.

'அக்கா ஜி பே பண்ணிட்டேன்' என ஒரு இளைஞன் தன் போனை காண்பிக்க, 'என்ன தம்பி நீங்க காட்டணும்னு அவசியம் இல்ல. வயிறு நிறைய சாப்பிட்டீங்களா நாளைக்கும் வாங்க. அது போதும்' என வழியனுப்புகிறார்.

அவரின் செயல்பாடுகள் நம்மை ஈர்க்கவே... அவரிடம் பேச்சு கொடுத்தோம். பேட்டி என்றதும், 'பேட்டியா... டிவில வருமா?' எனத் தன் புடவையால் முகத்தைத் துடைத்து புன்னகையுடன் பேசத் தொடங்கினார். 

"என் பேரு இன்பவள்ளி. பொறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையிலதான். வீட்டுக்காரர் செக்யூரிட்டி வேலை பார்த்துட்டு இருந்தாரு. எங்களுக்கு மூணு பொட்டப்புள்ளைக. ஊர்ல எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. ஆனா, நான் ஒரு நாளும் வருத்தப்பட்டது இல்ல. எந்தப் புள்ளையா இருந்தாலும் வளர்த்து ஆளாக்கப் போறோம். இதுல எதுக்கு பாகுபாடு. இன்னும் சொல்லணும்னா பொட்டப்புள்ளைக வரம்.

சேப்பாக்கத்தில் உள்ள இன்பவள்ளியின் தள்ளுவண்டிக்கடை
சேப்பாக்கத்தில் உள்ள இன்பவள்ளியின் தள்ளுவண்டிக்கடை

என் வீட்டுக்காரருக்கு குடிப்பழக்கம் இருந்துச்சு. கிடைக்கிற வருமானத்துல குடிச்சுட்டு வீட்டு செலவுக்குக் காசு கொடுக்காம ரொம்ப கஷ்டப்படுத்துனாரு.

பிள்ளைகளுக்குச் சாப்பாடு போட வட்டிக்குக் காசு வாங்குனேன். ஒரு கட்டத்துல அதைக் கூட கட்ட முடியாம, வட்டி, வட்டிக்கு வட்டினு தெருவுல நின்னுருக்கேன்.

இந்தப் புள்ளைக ஏன்  பொட்டப்புள்ளைகள பொறந்துச்சுனு நான் அழுதது இல்ல. ஆனா, ஏன் என் வயித்துல பொறந்துச்சுங்கனு அழுதுருக்கேன். அவ்வளவு கஷ்டம். ஆனா, அந்த மனுஷனுக்கு எதைப் பத்தியும் கவல இல்ல. தினமும் குடிச்சுட்டு வருவாரு.

என் மூணாவது புள்ள பொறந்தப்போ வீட்ல சுத்தமா காசு இல்ல. வேற வழியே இல்லாம பச்சைப்புள்ளய தூக்கிட்டு வீட்டு வேலைக்குப் போனேன்.

அப்புறம் ஒரு டீக்கடையில பாத்திரம் கழுவுற வேல, பூ வியாபாரம்னு கிடைக்கிற வேலையெல்லாம் பண்ணிருக்கேன். மூணு நேரமும் என் பிள்ளைகளுக்குச் சாப்பாடு போடணுங்கிறது தான் அப்போ என்னோட பெரிய லட்சியமா இருந்துச்சு.

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தூங்காம உழைப்பேன். 200 ரூபா வருமானம் தான் கையில நிக்கும். அதுல பிள்ளைகளுக்கான செலவு, கடன், வீட்டு செலவுனு எல்லாத்தையும் பார்த்துக்கணும். 

வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் இன்பவள்ளி
வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் இன்பவள்ளி

நான் வீட்டுக்குப் போகுற வரைக்கும் பிள்ளைக சாப்பிடாம இருக்குங்க. பகல் முழுக்க சம்பாதிச்ச காசுலதான் அரிசி, காய்கறி வாங்கிட்டு போவேன். சமைச்சு பிள்ளைகளுக்குச் சாப்பாடு போடுவேன்.

ராத்திரி சமைச்சது தான் அடுத்த நாள் ராத்திரி வரை. ஒரு நாள் உடம்பு முடியலைனு படுத்தா அடுத்த நாள் என் புள்ளைங்க பட்டினி கிடக்குங்க. அதனால லீவே எடுக்காம வேலைக்கு ஓடுவேன்.

சில நாள் வருமானம் குறைச்சலா இருக்கும். அன்னைக்கு ராத்திரி பிள்ளைகளுக்கு மட்டும் சோறு ஆக்கி கொடுத்துட்டு, நான் தண்ணிய குடிச்சுட்டு படுத்துப்பேன். ரொம்ப கொடுமையான நாளும்மா அது" என்றவர் நிதானித்து உணவுக்கடை தொடங்கியது பற்றிப் பேச ஆரம்பித்தார். 

"அன்றாடம் செலவுக்கே வருமானம் போதுமானதா இல்ல. அதனால, எதாவது சின்னதா ஒரு தொழில் தொடங்கலாம்னு தோணுச்சு. அப்போ இந்த ஏரியால சாப்பாடு கடையெல்லாம் பெருசா இல்ல. அதனால டிபன் கடை போடலாம்னு முடிவு பண்ணேன். கையில 200 ரூபா இருந்துச்சு. 50 ரூபாய்க்கு பாத்திரம், 50 ரூபாய்க்கு காய்கறி, 50 ரூபாய்க்கு மளிகை சாமான், 50 ரூபாய்க்கு அடுப்பு எரிக்க பொருள் வாங்குனேன்.

ஒரு தள்ளு வண்டிய வாடகைக்கு எடுத்தேன். சாப்பாடு கடை போட்டு கிடைக்கிற லாபத்துல வாடகை கொடுத்துறலாங்கிறது என் கணக்கு.

சின்ன வயசுல இருந்து நான் வளர்ந்த இடங்கிறதால இங்கேயே கடை போட்டுட்டேன். தினமும் கடை போட்டு கிடைக்கிற காசுல வண்டிக்கான வாடகை, அடுத்த நாளுக்குத் தேவையான பொருள், பிள்ளைகளுக்குத் தேவையான பொருள் வாங்குறதுனு ஆறு மாசம் கழிஞ்சுது. 

உணவு தயாரிக்கும் தள்ளுவண்டிக் கடைக்காரர் இன்பவள்ளி
உணவு தயாரிக்கும் தள்ளுவண்டிக் கடைக்காரர் இன்பவள்ளி

எங்க ஏரியால ஒரு அண்ணே, டீக்கடை நடத்திட்டு இருந்தாரு. அவர்கிட்ட இருந்து பழைய தள்ளுவண்டியைப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்குனேன்.

கூடுதலா உழைக்க ஆரம்பிச்சேன். கிடைச்ச லாபத்தைக் குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து ரெண்டு பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணிட்டேன். இன்னும் ஒரு பொண்ணுக்கு மட்டும் கல்யாணம் பண்ணணும்.

கஷ்டப்பட்ட காலத்துல சொந்த பந்தம் யாரும் உதவல. மூணும் பொட்டப்புள்ளயானு கிண்டல்தான் பண்ணாங்க. போற இடத்துல எல்லாம் அவமானப்படுத்துனாங்க. இப்போ காலம் மாறிருக்கு. என் உழைப்பு குடும்பச் சூழலை மாத்தியிருக்கு.

'மூணும் பொண்ணா'னு கேட்டவங்க, இப்போ வாயடைச்சு பாக்குறாங்க. என் பிள்ளைக எனக்காக எவ்வளவோ பண்ணுதுங்க. 'அதுங்களோட உலகம் நான்தான்'னு சொல்லுதுங்க.

இதெல்லாம் கேக்குறப்போ இன்னொரு பொட்டப்புள்ள பெத்துக்காம விட்டுட்டேன்னு கூட யோசிப்பேன்" என்றவர் தன் அன்றாட வேலைகளைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார். 

காலையில ஏழு மணிக்கு எந்திரிச்சு 10 மணிக்குள்ள காலை சாப்பாட்டை முடிச்சுருவேன். அப்புறம் கடைக்குப் போயி சிக்கன், மட்டன், முட்டை, காய்கறியெல்லாம் வாங்கிட்டு வந்து சமைக்க ஆரம்பிப்பேன்.

5 மணிக்குச் சமையல் முடியும். நானும் என் சின்னப் பொண்ணும் இங்க வந்து ஆறு மணிக்கு வியாபாரத்தை ஆரம்பிப்போம். இட்லி, தோசை, சப்பாத்தி, சிக்கன் குருமா, மட்டன் கிரேவி, மீன் குழம்பு, சட்னி, சாம்பார், ஆம்லெட் இதுதான் மெனு.

8 மணியில இருந்து 11 மணி வரை வியாபாரம் நல்லா இருக்கும். 12 மணிக்குப் பாத்திரத்தையெல்லாம் ஏறக்கட்டி வீட்டுக்குப் போக 2 மணி ஆகும். திரும்பி அடுத்த நாளும் இதே தான். ஒரு நாளைக்கு 1,800 ரூபாயில இருந்து 2,000 ரூபா வரை கையில நிக்கும்" என்றவரிடம் 'உங்களுக்கு ஏதேனும் உதவி வேணுமா?' என்று கேட்டோம்.

இன்பவள்ளியின் தள்ளுவண்டிக்கடை
இன்பவள்ளியின் தள்ளுவண்டிக்கடை

"நீங்க கேட்டதே சந்தோசம். 50 வருசமா யாரும் சொல்லாத வார்த்தைய நீங்க சொல்லிருக்கீங்க. ஆண்டவன் மூணு நேர சாப்பாட்டுக்குப் படி அளக்குறான். என்னால முடிஞ்சது தினமும் சிலருக்கு இலவசமா சாப்பாடு குடுக்குறேன்.

எத்தனையோ ஆதரவற்றவங்க இருக்காங்க. அவங்களுக்கு உங்களால முடிஞ்சத பண்ணுங்க. யாருக்காவது சாப்பாடு வேணும்னா சொல்லுங்க நான் தர்றேன்.

சாப்பாடு இல்லாம பட்டினியா கிடக்கிறதோட வலி என்னனு எனக்குத் தெரியும். எல்லாரும் பசியில்லாம தூங்கணும் அதுக்கு நம்மளால முடிஞ்சதைச் செய்வோம்" என வியக்க வைக்கிறார் இன்பவள்ளி அக்கா.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs