‘சென்னை சங்கமம்’- 4 நாள்கள் திருவிழா: அமைச்சா் சாமிநாதன் தகவல்
சென்னை: சென்னை சங்கமம் திருவிழா, 4 நாள்கள் நடைபெறவிருப்பதாக தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளாா்.
இது குறித்து தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த ஆண்டு ஜன. 13-ஆம் தேதி தொடங்கிவைப்பாா். அதன்பிறகு, ஜன. 14 முதல் 17-ஆம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
சென்னையையொட்டியுள்ள மாவட்டங்கள் மட்டுமல்லாது, மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.