சென்னை: நாய்கள் கடித்துக் குதறியதால் முதியவர் மரணமா? - அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை!
சென்னை, அரும்பாக்கம் வாசுகி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (80). இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியாக வசித்து வந்த இவர், கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். சுப்பிரமணியின் உறவினர்களும், அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராணி (50) என்பவரும் முதியவர் சுப்பிரமணியத்தை கவனித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முகப்பேரில் குடியிருக்கும் சுப்பிரமணியின் உறவினர்கள் அவரைச் சந்தித்து நலம் விசாரித்து விட்டு சென்றனர். அதன் பிறகு தனியாக படுத்திருந்த சுப்பிரமணியின் வீட்டுக்குள் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. அதனால் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ராணி அங்கு வந்திருக்கிறார்.
அப்போது சுப்பிரமணியை சுற்றி இரண்டு தெரு நாய்கள் நின்றுக் கொண்டிருந்தன. அதில் ஒரு நாய் அவரைக் கடித்து குதறிக் கொண்டிருந்தது. உடனடியாக நாய்களை வீட்டிலிருந்து விரட்டிய ராணி, முதியவர் சுப்பிரமணியைப் பார்த்திருக்கிறார். அப்போது சுப்பிரமணி உயிரற்ற சடலமாக கிடந்திருக்கிறார். இதையடுத்து அவரின் உறவினர்களுக்கு ராணி தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த சுப்பிரமணியின் உறவினர்கள், அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் .சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சுப்பிரமணியின் சடலத்தைப் பார்த்த போது நாய்கள் கடித்ததற்கான காயங்கள் இருந்தன. அவர் எப்படி இறந்தார் என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இந்தச் சம்பவம் அரும்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.