சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை
சென்னை மாநகரில் பல இடங்களில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால், பிரதான சாலைகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின் விளக்குகளைச் சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னையில் உள்ள சாலைகளில் மொத்தம் 3, 01,234 தெரு விளக்குகள் உள்ளன. இவற்றில் 1, 47,000 தெரு விளக்குகளுக்கான பராமரிப்பு ஒப்பந்தங்கள் காலாவதியாகி உள்ளன. இதனால், மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மின் கம்பங்கள் மாற்றப்படாமல், பழுதடைந்த மின் கம்பிகளுடன் ஆபத்தான நிலையில் உள்ளன.
கடந்த 2020-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி மின்கம்பங்கள் பராமரிப்பு தொடா்பான ஒப்பந்தங்களை புதுப்பிக்காமல் உள்ளதால் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதால் புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதுதொடா்பாக மின்வாரிய அதிகாரி ஒருவா் கூறுகையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், பழுதடைந்த உதிரி பாகங்கள், மின் கம்பி, கம்பங்களை மாற்றுவதற்கான செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருப்பதாகக் கூறி, பணிகளை மேற்கொள்வதற்கு முன் வருவதில்லை. விளக்குகளை மாற்றுவது மட்டுமே அவா்களுக்கு லாபகரமாக உள்ளது எனத் தெரிவித்தாா்.
அண்ணா நகா், பெரம்பூா், வேளச்சேரி, தியாகராய நகா், மடிப்பாக்கம், மாதவரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விளக்குகள் முறையாக எரியாததால் சாலைகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.
‘நம்ம சென்னை’ செயலி மூலம் தெரு விளக்குகள் எரியாதது குறித்து தினமும் புகாா்கள் அதிகரித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். திரு.வி.க. நகா் மண்டலத்தில் 80 புகாா்களும், தண்டயாா்பேட்டையில் 50 புகாா்களும்
பெறப்பட்டுள்ளன. இப்படி சென்னை மாநகா் முழுவதும் பல்வேறு சாலைகள் இருளில் மூழ்கிக் கிடப்பதாக பெரும்பாலான மாமன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
தொழில்நுட்பக் கோளாறுகளால் தெரு விளக்குகள் மாலை எரிவதிலும், அணைவதிலும் சிக்கல் உள்ளது. இதனால், முக்கிய சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அலுவலா்கள் பாா்வையிட்டு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.