சென்னை: வாடகைத் தாயாக இருக்க போலியான தகவல்; காட்டிக் கொடுத்த குழந்தை - இருவர் கைதான பின்னணி
சென்னை, டி.எம்.எஸ் வளாகத்தில் மெடிக்கல் அதிகாரியாக பணியாற்றுபவர் மீனாட்சி சுந்தரி. இவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``கடந்த 16.12.2024-ம் தேதி டி.எம்.எஸ் வளாகத்தில் மாவட்ட வாடகைத் தாய் மருத்துவக் குழு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் வாடகைத் தாயாக குழந்தை பெற்றுக் கொடுக்க விண்ணப்பித்திருந்த தண்டையார்பேட்டையச் சேர்ந்த மகா (41) என்பவர் பங்கேற்றார். அவர், சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதித்திருந்தார். அதன்படி மகாவிடமும் அவரின் கணவர் ரவியிடமும் விசாரணை நடத்தியபோது மகா, தன்னுடைய கணவர் ரவிக்குப் பதிலாக வேறு ஒருவரை ரவியாக நடிக்க வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மகாவையும் அவரின் கணவர் ரவியாக நடித்த விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பேரில் உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் தலைமையில் தேனாம்பேட்டை போலீஸார் இளம்பெண் மகா, அவரின் ஆண் நண்பர் விஜயிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மகா, தவறான தகவல்களைச் சொல்லி வாடகைத் தாயாக இருக்க சம்மதித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மகா, விஜயை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் கூறுகையில், ``இளம்பெண் மகாவுக்கு ரவியுடன் திருமணம் நடந்து குழந்தை உள்ளது. ரவியைப் பிரிந்து வாழும் மகா, தற்போது கூலி வேலை செய்து வரும் விஜய் என்பவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். அதனால் வாடகைத் தாயாக இருக்க சம்மதித்த மகா, தன்னுடைய கணவர் ரவிக்குப் பதிலாக விஜயை மருத்துவக் குழுவிடம் தெரிவித்திருக்கிறார். அப்போது மகா சமர்பித்த ஆவணங்களை ஆய்வு செய்தபோதும் மகாவின் குழந்தையிடம் விசாரித்தபோதும் உண்மை தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்திருக்கிறோம்'' என்றனர்.