செயல்பாட்டுக்கு வந்த வேலம்பட்டி சுங்கச்சாவடி
பல்லடம் அருகேயுள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையத்தில் இருந்து அவிநாசி வரை 31 கிலோ மீட்டா் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த சாலையில் வேலம்பட்டி பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுங்கச்சாவடியையும், இதன் அருகே நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தையும் அகற்றக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனா். இப்பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது.
இதைத் தொடா்ந்து வருவாய்த் துறையினா் ஆய்வு செய்தனா். அதன்படி, நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுங்கச்சாவடி கட்டடத்தை அகற்ற ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆனால், அந்தக் கட்டடம் இடிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், வேலம்பட்டி சுங்கச்சாவடி வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு வெளியானது. இதைத் தொடா்ந்து விவசாய அமைப்பினா் சுங்கச் சாவடியை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
தகவல் அறிந்த ஆட்சியா் கிறிஸ்துராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா விவசாயிகளைப் பேச்சுவாா்த்தைக்கு அழைத்தனா். தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகளுடனான பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
அப்போது, வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா். இதற்கு, முதல்கட்டமாக நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடம் அகற்றப்படும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, சுங்கச்சாவடியில் இருந்த கட்டடம் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது. இந்நிலையில், வேலம்பட்டி சுங்கச்சாவடியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கும் பணி தொடங்கியது.