கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி: கல்வித் துறை அறிவுறுத்தல்
செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் பார்க்க விரும்புகிறேன்: குகேஷ்
செஸ் போட்டி ஒலிம்பிக்கில் இடம்பெறுவதைப் பார்க்க விரும்புவதாக உலக செஸ் சாம்பியன் குகேஷ் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனாக வலம் வந்த சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதனையடுத்து, அவருக்கு பிரதமர் முதல் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.
இதையும் படிக்க: மகளிர் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு! பிப்ரவரி 14-ல் தொடக்கம்!
ஒலிம்பிக்கில் செஸ் போட்டி
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள குகேஷ், ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் போட்டி இடம்பெறுவதை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக, இந்தியாவில் ஒலிம்பிக் நடைபெறும் பட்சத்தில், அதில் செஸ் இடம்பெறுவதை விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உலக செஸ் சாம்பியன் குகேஷ் பேசியதாவது: ஒலிம்பிக்கில் செஸ் போட்டி இடம்பெறுவதைப் பார்க்க விரும்புகிறேன். அதிலும் குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும் பட்சத்தில், அதில் செஸ் இடம்பெறுவதைப் பார்க்க விரும்புகிறேன். செஸ் போட்டிக்கான வரவேற்பு மற்றும் ஆதரவு அதிகரித்துள்ளதாக நினைக்கிறேன். அதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒலிம்பிக்கில் செஸ் இடம்பெற்றால், அதனை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். ஒலிம்பிக்கில் செஸ் இடம்பெறுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.
இதையும் படிக்க: டெஸ்ட் தொடர் தோல்வி எதிரொலி: இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்தியா!
2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.