'செஸ் ப்ளேயர்ஸூக்கு அரசு வேலை தவிர இந்த மாதிரியான உதவிகளையும் செய்தால் நல்லது'- விஸ்வநாதன் ஆனந்த்
இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு சூப்பர் சென்னை நிறுவனம் இன்று செப்டம்பர் மாதத்திற்கான ‘Icon of the Month’ விருதை வழங்கி சிறப்பித்தது.
என் பயணத்தை வடிவமைத்த சென்னை நகரம்
விருதைப் பெற்றுக்கொண்ட பின் பேசிய விஸ்வநாதன் ஆனந்த், ``சென்னையின் அடையாளத்தில் செஸ் விளையாட்டு எப்போதும் மிகப்பெரிய இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த நகரம்தான் என் பயணத்தை வடிவமைத்தது. என் அம்மாவிடம் இருந்துதான் நான் செஸ்ஸைக் கற்றுக்கொண்டேன்.

சென்னையில் இருந்து திறமையான இளைஞர்கள் உருவாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது உற்சாகமாக இருக்கிறது. தற்போதுள்ள இளைஞர்களை பார்க்கையில் இந்த விளையாட்டு இங்கு எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை உணர முடிகிறது” என்றார்.
அரசு உதவிகள் குறித்து விஸ்வநாதன் ஆனந்த்
தொடர்ந்து அவரிடம் செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கும், செஸ் வீரர்களுக்கும் உலகளவில் கிடைத்திற்கும் அங்கீகாரத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று நாம் கேட்டோம்.
அதற்கு பதிலளித்த விஸ்வநாதன் ஆனந்த், “ நான் விளையாடிய தருணத்திலும் எனக்கு பட்டங்கள், அங்கீகாரம் எல்லாம் கிடைத்தது. பத்திரிகைகளில் எல்லாம் செஸ் பற்றிய செய்திகள் வந்தன.
அதுவே எனக்கு சந்தோஷமாக இருந்தது. இப்போது செஸ் பற்றி இன்னும் அதிகமாக படிக்கிறார்கள், கேள்விப்படுகிறார்கள். அதனால் செஸ் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரு செஸ் வீரராக இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றார்.

இதனைத்தொடர்ந்து பட்டம் வெல்லும் செஸ் வீரர்களுக்கு அரசு வேலை தவிர வேறு எந்த மாதிரியான உதவிகளை மாநில அரசுகள் செய்துக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பினோம்.
“வீரர்களின் கவலைகளை குறைக்கும் வகையிலான உதவிகளை அரசு செய்ய வேண்டும். செஸ் வீரர்கள் அந்த ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடுவதற்கான சூழலை உருவாக்கி தரும் வகையில் உதவிகளை செய்ய வேண்டும்” என்று பதிலளித்தார்.
நாயகனை நாம் கொண்டாடுகிறோம்
தவிர விஸ்வநாதன் ஆனந்திற்கு விருது வழங்கியது குறித்து பேசிய சூப்பர் சென்னை நிர்வாக இயக்குநர் திரு. ரஞ்சீத் ராதோட், “விஸ்வநாதன் ஆனந்த், சென்னையை உலக செஸ் வரைபடத்தில் பதித்ததோடு மட்டுமின்றி ஏராளமான இளைஞர்கள் இந்த விளையாட்டைத் தொடர ஊக்குவித்திருக்கிறார்.

அவருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஐகான் விருது கொடுத்து கௌரவிப்பதன் மூலம், ஒரு உண்மையான உன்னதமான நாயகனை நாம் கொண்டாடுகிறோம்" என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.