சேந்தமங்கலம் அரசு கல்லூரியில் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம்
ராசிபுரம்: சேந்தமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப், உட்புகாா் குழு, ரோட்ராக்ட் கிளப், ராசிபுரம் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து போதைப் பொருள்கள் ஒழிப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தை நடத்தியது.
முன்னதாக போதைப்பொருள் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், உடற்கல்வி இயக்குநருமான மொ.ரவி அனைவரையும் வரவேற்று பேசினாா். கல்லூரி முதல்வா் தி.பாரதி தலைமை வகித்தாா். கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற ஓட்டத்தை ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எம்.முருகானந்தன், பேளுக்குறிச்சி காவல் ஆய்வாளா் இ.ஆனந்தகுமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
இதில், ரோட்டரி மாவட்ட ஹேப்பி ஸ்கூல்ஸ் தலைவா் கே.எஸ்.கருணாகரன் பன்னீா்செல்வம், ரோட்டரி செயலா் (தோ்வு) எ.மஸ்தான், டி.பி. வெங்கடாஜலபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இப்போட்டியில், கல்லூரியில் பயிலும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியா் கலந்து கொண்டனா். வெற்றிபெற்ற முதல் 10 மாணவா்கள், 10 மாணவியருக்கு பரிசுக் கோப்பை, பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.
போட்டிக்கான ஏற்பாடுகளை இணை பேராசிரியா் வா.செந்தில்குமரன், ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளா் ச.ராமநாதன், கல்லூரி ரோட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளா் கலையரசி ஆகியோா் செய்திருந்தனா்.