`சேர்த்து வைத்த தேர்தல் தோல்வி?’ - பல ஆண்டுகளுக்குப்பின் பேசிக்கொண்ட ராஜ் தாக்கரே - உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து ராஜ் தாக்கரே 2006-ம் ஆண்டு விலகுவதற்கு முன்பு அவருக்கும், உத்தவ் தாக்கரேயிக்கும் இடையே கட்சியில் அதிகாரப்போட்டி நிலவியது. உத்தவ் தாக்கரே பால் தாக்கரேயின் மகன், ராஜ் தாக்கரே பால் தாக்கரேயின் மருமகன். இப்போட்டியால் ராஜ் தாக்கரே கட்சியை உடைக்காமல் தான் மட்டும் தனித்து வெளியில் வந்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு இருவரும் பெரிய அளவில் சந்தித்து பேசிக்கொண்டது கிடையாது. எதாவது நிகழ்ச்சியில் சந்திக்க நேரிட்டாலும் ஒதுங்கி செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தனர்.
ராஜ் தாக்கரே எப்போதும் தனித்தே தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். கடந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவோடு சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இறுதியில் தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தார்.
ராஜ் தாக்கரே மகன் கூட தேர்தலில் தோற்றுப்போனார். இதேபோன்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிறகும் படுதோல்வியை கண்டுள்ளது. எனவே வரும் மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட உத்தவ் தாக்கரே கட்சி முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் பல ஆண்டுகளாக சந்தித்து பேசிக்கொள்ளாத உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் திருமணம் ஒன்றில் சந்தித்து பேசிக்கொண்டனர்.
ராஜ் தாக்கரேயின் சகோதரி மகன் திருமணத்தில் இவர்கள் சந்தித்துக்கொண்டனர். உத்தவ் தாக்கரே தனது மனைவியுடன் திருமணத்தில் கலந்து கொண்டார். இருவரது குடும்பமும் திருமணத்தில் சந்தித்து பேசிக்கொண்டனர்.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு நடந்துள்ள இச்சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.சஞ்சய் ராவத் சொல்லிக் கொண்டிருக்கிறார். மற்றொரு புறம் ராஜ் தாக்கரேயை பா.ஜ.க தனது கூட்டணியில் சேர்த்துக்கொள்ள மறுத்து வருகிறது. எனவே தாக்கரே சகோதரர்களை தேர்தல் கூட்டணியில் சேர்க்க அவர்களது குடும்பம் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இச்சந்திப்பு குறித்து சிவசேனா அமைச்சர் சஞ்சய் சிர்ஷாத் கூறுகையில், ''இச்சந்திப்பில் அரசியல் முக்கியத்தும் இருக்காது. இதற்கு முன்பு பல முறை ராஜ் தாக்கரே உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணி வைக்க முயன்றார். ஆனால் உத்தவ் தாக்கரே அதற்கு சம்மதிக்கவில்லை'' என்றார்.