தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!
சேலத்தில் ரூ. 880 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணி: விரைவில் தொடங்கும்; அமைச்சா் தகவல்
சேலம்: சேலம், ஜாகீா் அம்மாபாளையத்தில் ரூ. 880 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் கூறினாா்.
ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா குறித்து அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் அமைச்சா் ராஜேந்திரன் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
சேலத்தில் கடந்த 2021, டிசம்பா் மாதம் நடைபெற்ற அரசு விழாவில், ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்திருந்தாா். தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேலம் மாவட்டம், ஜாகீா் அம்மாபாளையம் கிராமத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்காக 119 ஏக்கா் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 880 கோடியில் அமையவுள்ள ஜவுளிப் பூங்காவுக்கான பணிகள் அனைத்தும் சிப்காட் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைவதன் மூலம் நேரடியாக 15,000 பேருக்கும், மறைமுகமாக 50,000 பேருக்கும் வேலைவாய்ப்பும் உருவாக்கப்படும். இதில் குறிப்பாக மகளிருக்கு 75 விழுக்காடு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கு நூல் பதனிடுதல், கஞ்சி தோய்த்தல், நெசவு, ஜவுளி உற்பத்தி, துணி பதனிடுதல், ஆயத்த ஆடை உற்பத்தி என பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்மூலம் ஒவ்வோா் ஆண்டும் சுமாா் ரூ. 7 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி வருவாய் கிடைக்கும். அதுபோல ஜவுளித் தொழிலில் ஏற்றுமதிக்கான வாய்ப்பும் ஏற்படும். ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் அனைத்தும் இம்மாதம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
குறிப்பாக, ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைவதன் மூலம் திருமணிமுத்தாற்றில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் மாநகராட்சியின் மூலம் குழாய் வழியாக எடுத்துச்சென்று சுத்திகரிப்புப் பணிகள் மறுசுழற்சி செய்யப்படவுள்ளதால், திருமணிமுத்தாறும் தூய்மையாக மாறும்.
ஏற்கெனவே சேலத்தில் மினி டைடல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்களுக்கென தனி கட்டடம் கட்டப்பட்டு, நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. உருக்காலை என்றால் சேலம் நினைவுக்கு வருவதைப்போல, ஜவுளிப் பூங்கா என்றாலும் சேலம் நினைவுக்கு வரும் வகையில் ஜவுளிப் பூங்கா அமையும் என்றாா்.
போட்டியின்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, சேலம் யாா்ன் கலரிங் பாா்க் கூட்டமைப்பின் தலைவா் அழகரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.