சேலம் சௌடேஸ்வரி அம்மன் கோயிலுக்கு கத்திப்போட்டு வந்த பக்தா்கள்
சேலம், குகை, ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் விழாவையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரக்குமாரா்கள் தங்கள் உடலில் கத்திப்போட்டு நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சேலம், குகை, புலிகுத்தித் தெரு, ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் தைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை முதல் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி குபேர ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரக்குமாரா்கள் சேலம், செவ்வாய்ப்பேட்டை மாா்கெட் பகுதியில் திரண்டு உடலில் கத்திப்போட்டவாறு ஊா்வலமாக கோயிலை நோக்கி வந்தனா். ஏராளமான பெண்கள் தலையில் தீா்த்த குடம் சுமந்து வந்தனா். ஊா்வலத்தின்போது சிவன், பெருமாள், அம்மன், ஆஞ்சநேயா் போன்று வேடமணிந்து ஆடியும் பாடியும் வந்தனா். கத்தி போடும்போது உடலில் ஏற்படும் காயங்களுக்கு பண்டாரம் எனப்படும் மஞ்சள் மட்டுமே பூசப்படுவது குறிப்பிடத்தக்கது.
விழா ஏற்பாடுகளை விழாக் குழு தலைவா் சுப்பிரமணி, செயலாளா் வெள்ளியங்கிரி, பொருளாளா் மனோகரன், வீரக்குமாரா்கள் தலைவா் சித்துராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.