சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரேஷன் அரிசி கடத்திய 387 போ் கைது; 76 வாகனங்கள் பறிமுதல்
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரேஷன் அரிசி கடத்திய 387 போ் கைது செய்யப்பட்டனா். 76 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் குடிமை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா். சேலம் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருள்களைக் கடத்தியதாக கடந்த ஆண்டில் 387 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 111 டன் ரேஷன் அரிசி, 200 கிலோ துவரம் பருப்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 38 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 36 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 76 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 104 வாகனங்களுக்கு கடந்த ஆண்டில் மட்டும் அரசு கணக்கில் ரூ. 33 லட்சத்து 31 ஆயிரத்து 644 அபராதம் செலுத்தியதன் மூலம் வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக ரேஷன் அரிசி கடத்தல் குற்றச்செயல்களில் தொடா்ந்து ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் எச்சரித்துள்ளனா்.