அமைப்பு மாற்றம் டு வேட்பாளர் தேர்வு, மாநாடு! - 2026-க்குத் தயாராகும் விசிக!
சொத்துகளின் அழகை சிதைப்பதற்கு எதிராக தில்லி முதல்வர் எச்சரிக்கை
நமது நிருபர்
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப்படுத்தும் பணியில் பங்கேற்ற முதல்வர் ரேகா குப்தா, தலைநகரில் சொத்துகளின் அழகை சிதைப்பது பொறுத்துக் கொள்ளப்படாது என்றார்.
அரசியல் தொண்டர்கள் எந்த சொத்துகளிலும் தனது புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் சேவா பக்வாடா திட்டத்தின் கீழ் ஷாலிமார் பாக் தொகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் முதல்வர் பங்கேற்றார். ரிங் ரோட்டில் உள்ள மேம்பாலத் தூணில் இருந்து சுவரொட்டிகளை அகற்றினார்.
அப்போது, அவர் கூறுகையில், "சுவர் எழுத்துகள் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலம் சொத்துகளை சிதைப்பது நகரத்தை அசுத்தமாக்கும் மிகப் பெரிய குற்றமாகும். சொத்துகளின் முகப்பு அழகை சிதைப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் குறிப்பாக அரசியல்வாதிகளை நான் வலியுறுத்துகிறேன்.
எனது புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டாதீர்கள்.
சுத்தம் என்பது ஒரு மணி நேர இயக்க விஷயம் மட்டுமல்ல, தினசரி முயற்சியாக இருக்க வேண்டும். தூய்மைப் பணியில் குடியிருப்பு நலச் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் உள்பட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பங்கேற்க வேண்டும். தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.
தில்லியில் உள்ள ரிங் ரோடு மகாத்மா காந்தி மார்க் பகுதியில் நடைபெற்ற தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் பொதுப் பணித் துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் பங்கேற்றார்.
சேவா பக்வாடா நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, பொதுப் பணித் துறை 55 கிலோமீட்டர் ரிங் ரோட்டை எட்டு அதிகார வரம்பு பிரிவுகளாகப் பிரித்து, அடுத்த பதினைந்து நாள்களுக்கு சுத்தம் செய்தல், பழுதுபார்க்கும் பணிகளை மேற்பார்வையிட ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு பொறுப்பான பொறியாளரை நியமித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் பர்வேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தில்லியை சுத்தமாக வைத்திருப்பது எங்கள் உறுதிப்பாடாகும். மேலும், நகரம் முழுவதும் தூய்மைப்படுத்தும் இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது. ஏராளமான கட்சித் தொண்டர்கள் இப்பிரசாரத்தில் இணைகிறார்கள்' என்றார்.
தில்லியில் உள்ள பாஜக அரசின் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த கட்சித் தலைவர்களும் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர்.
தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா ஐடிஓ மேம்பாலத்தின் கீழ் ரோஸ் கார்டன் அருகே நடந்த இந்த தூய்மைப் பணி இயக்கத்தில் பங்கேற்றார்.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ரிங் ரோட்டில் உள்ள மேம்பாலங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் உள்பட 71 இடங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டதாக தில்லி பாஜக தெரிவித்துள்ளது.