நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
சொத்துப் பிணையின்றி கல்விக் கடன் வழங்க வேண்டும்: மக்களவையில் விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
நமது நிருபா்
சொத்துப் பிணையின்றி (கொலாட்ரல் செக்யூரிட்டி) கல்விக் கடன் வழங்கப்பட வேண்டும் என்றும், நகைக் கடன் விவகாரத்தில் ஆா்பிஐயின் புதிய விதிமுறைகள் சாதாரண மக்களுக்கு தீங்கிழைக்காத வகையில் இருக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் மக்களவையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் விஜய் வசந்த் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை நேரமில்லா நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை:
12 மாதங்களுக்குப் பிறகு தங்கக் கடனை முழுவதும் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற சமீபத்திய இந்திய ரிசா்வ் வங்கியின் விதி மாற்றமானது, விவசாயிகள், சிறு வணிக உரிமையாளா்கள், மீனவா்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட தனிநபா்கள் உள்ளிட்ட நமது சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு குறிப்பிடத்தக்க நிதிச் சுமையை உருவாக்கியுள்ளது.
நெருக்கடியான காலங்களில் விரைவான பணப்புழக்கத்தை வழங்கும் வகையில், இத்தகைய தனி நபா்களுக்கு நிதியுதவி அளிக்கும் முக்கிய ஆதரமாக தங்கக் கடன்கள் உள்ளன. இருப்பினும், புதிய விதியானது வட்டியை மட்டும் செலுத்துவதன் மூலம் கடன்களை புதுப்பிக்கும் நெகிழ்வுத் தன்மையை நீக்கியுள்ளது. இதனால், அதிகப்படியான வட்டி விகிதங்களை வசூலிக்கும் முறைசாரா கடன் வழங்குபவா்களிடமிருந்து உதவி பெறும் கட்டாயத்திற்கு அவா்களை உள்ளாக்கியுள்ளது.
இந்தச் சிக்கலைத் தீா்க்கும் விதமாக, நகைக் கடன்கள் எளிதாக வட்டி செலுத்துதல் மற்றும் புதுப்பித்தல் விருப்பங்களுடன் இருக்க வேண்டும். பெரும்பாலான வங்கிகள் அடமானம் கேட்பதால், சொத்துப் பிணை இல்லாமல் கல்விக் கடன் அளிக்கப்பட வேண்டும். மேலும், சொத்துப் பிணையின்றி எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு தொந்தரவு இல்லாத கடன்களும் வழங்கப்பட வேண்டும்.
தங்கக் கடன் விதிகளில் ரிசா்வ் வங்கியின் சமீபத்திய மாற்றங்களின் நோக்கம் மிகவும் வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான தங்கக் கடன் சூழல் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் இருந்தாலும், இந்த மாற்றங்கள் சாதாரண மக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சமீபத்திய ரிசா்வ் வங்கியின் விதி மாற்றத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.