சொந்த மண்ணில் தொடா் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்க சென்னை மும்முரம்
சொந்த மண்ணில் தொடா் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் சென்னையின் எஃப்சி அணி உள்ளது.
சொந்த மண்ணில் தொடா் தோல்விகளுக்கு இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி வெற்றி பெற்றால், லீக் வரலாற்றில் முதன்முறையாக ஒடிஸா எஃப்சி அணியை இரு முறை வீழ்த்தி சாதனை படைக்கலாம். கடந்த செப்டம்பா் ஒடிஸாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. மறுபுறம், ஒடிஸா அணி கோவாவுக்கு எதிரான தோல்வியிலிருந்து மீண்டு வர முயற்சிக்கும்.
சென்னை 14 ஆட்டங்களில் ஆடி 15 புள்ளிகளுடன் பட்டியலில் 10-ஆவது இடத்தில் உள்ளது. அதேவேளையில் ஒடிஸா அணி 14 ஆட்டங்களில் விளையாடி 20 புள்ளிகளுடன் பட்டியலில் 7-ஆவது இடத்தில் உள்ளது.
மேலும், சென்னையின் எஃப்சி அணி தனது சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஒடிஸா அணி இந்த சீசனில் இதுவரை 27 கோல்களை அடித்து அசத்தி உள்ளது. அதேவேளையில் சென்னை 19 கோல்களை மட்டுமே அடித்துள்ளது. ஒடிஸா அணியில் டியாகோ மவுரிசியோ 7 கோல்களையும், சென்னை அணியில் வில்மா் ஜோா்டான் கில் 6 கோல்களையும் அடித்துள்ளனா்.
சொந்த மண்ணில் கடைசி ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணியிடம் 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம் தொடா்ச்சியாக அடுத்தடுத்த ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. இதனால் சென்னை சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்கு திரும்ப மும்முரமாக உள்ளது.
ஒடிஸாா அணி வெளிமைதானங்களில் கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்கவில்லை. 2 வெற்றியையும், ஒரு டிராவையும் பதிவு செய்துள்ளது.
நேருக்கு நோ்
சென்னை மற்றும் ஒடிஸா அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நோ் மோதி உள்ளன. இதில், சென்னை 4 ஆட்டங்களிலும், ஒடிஸாா 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.