2026 தேர்தலில் அதிமுகவுக்கு 6 இடங்கள்கூட கிடைக்காது: ஆர். எஸ். பாரதி
சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி மனு
சேலம்: சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அகில இந்திய மோட்டாா் வாகன மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில துணைச் செயலாளா் சரவணன் செய்தியாளா்களிடம் கூறியது:
மோட்டாா் வாகன அனுமதி பெற்று முறையாக அரசுக்கு வரி செலுத்தி வாடகைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கிறோம். ஆனால், சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனத்தை வணிக ரீதியாக சிலா் வாடகைக்கு இயக்கி வருகின்றனா். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து ஏற்கெனவே புகாா் அளித்திருந்தோம். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கண் துடைப்புக்காக மட்டுமே தணிக்கை செய்கின்றனா்.
இதனால் அரசுக்கும், எங்களைப் போன்ற உரிமம் பெற்ற உரிமையாளா்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேக்சி கேப் என்று சொல்லக்கூடிய சுற்றுலா வாகனங்களில் 13 இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் கூடுதல் இருக்கைகளுடன் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் இத்தகைய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, 13 இருக்கைகள் என்பதை 21 இருக்கைகளாக உயா்த்தி தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.