செய்திகள் :

செயற்கை கருத்தரிப்பு: வெற்றி வாய்ப்பு எவ்வளவு; எத்தனை முறை முயற்சிக்கலாம்? | பூப்பு முதல் மூப்புவரை

post image

செயற்கை கருத்தரிப்பு முறைகளில் முதலாவதும் முக்கியமானதுமான, 'Intra Uterine Insemination' எனும் செயற்கை விந்தூட்டல் அல்லது செயற்கை விந்தேற்றல் முறை பற்றி இன்று தெரிந்துகொள்வோம். அதற்குமுன், வரலாற்றின் சில பக்கங்களை சற்று முன்னுக்குத் தள்ளிப் பார்ப்போம்..!

1678-ம் ஆண்டு, மைக்ராஸ்கோப்பி கண்டறியப்பட்டபின், வான் லீவன்ஹூக் மற்றும் அவரின் உதவியாளர் ஜோனஸ் ஹெம், மனித விந்தணுக்களின் வடிவத்தையும் செயல்திறனையும் இவ்வுலகிற்கு எடுத்துரைக்க, அதிலிருந்து நூறாண்டுகள் கழிந்தபின்பு தான், அதாவது 1790-களில் செயற்கை விந்தூட்டல் முறை, மனிதர்களில் ஒரு பரிசோதனை முறையாக மேற்கொள்ளப்பட்டது.

செயற்கை கருத்தரிப்பு

அதுவரை, கால்நடைகளுக்கும் வளர்ப்பு மிருகங்களுக்கும் மட்டுமே பயன்பட்டு வந்த இந்தச் செயற்கை விந்தூட்டல் முறை, பல விமர்சனங்களையும் பற்பல சோதனைகளையும் தாண்டி, பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து மனிதர்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சிகிச்சைமுறையாக உருவெடுத்தது. இந்தச் சிகிச்சையை, முதன்முதலாக வில்லியம் பான்கோஸ்ட் எனும் அமெரிக்க மருத்துவர் தன் மாணவர்களிலேயே வசீகரமான ஒருவரின் விந்தணுக்களை குழந்தைப்பேறின்மையில் பயன்படுத்தியதாகவும், அதேசமயம் மேரி பார்ட்டன் எனும் ஆங்கிலேயப் பெண்மருத்துவர், தன் கணவரின் விந்தணுக்களைச் செலுத்தி, பல பெண்களைக் கருத்தரிக்க உதவினார் என்றும் வரலாறு கூறுகிறது.

அப்படித் தொடங்கிய இந்தச் செயற்கை கருத்தரிப்பு முறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக, விந்தணுக்கள் உறைதல் நுட்பத்துடன் 1950-ம் ஆண்டில், அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தில் உலகின் முதல் விந்தணு வங்கி தொடங்கப்பட்டு, அதிலிருந்து படிப்படியாக முன்னேறியுள்ள இந்தச் செயற்கை மருத்துவ நுட்பம், இன்று உலகெங்கும் பல லட்சம் குழந்தைப்பேறின்மை தம்பதியினரின் துயரத்தைப் போக்கும் ஓர் உன்னத எளிய சிகிச்சை முறையாக உருவெடுத்துள்ளது.

அதேசமயம், இந்த வகை செயற்கை சிகிச்சை முறைகள், மானுட வாழ்வியலுக்கும் கருத்தரிப்பு எனும் புனித நிகழ்விற்கும் எதிரானது என்று போப் ஜான் பால் உள்ளிட்ட மதத் தலைவர்கள், இதனை விமர்சித்துள்ளதையும் நம்மால் அறிய முடிகிறது.

பாலுறவு இல்லாமலே கருத்தரிப்பு

மனித இனம் தழைத்திட, இயற்கை விதியின்படி இயல்பான உடலுறவின்போது, பல்லாயிரக்கணக்கான விந்தணுக்கள் பெண்ணின் யோனிப்பாதையில் பதிந்து, அவற்றில் நன்கு நீந்திச்செல்லும் ஆற்றல்மிக்க ஆனால் மைக்ரான்கள் அளவே உள்ள விந்தணுக்கள், கருப்பைவாய், கருப்பை மற்றும் கருக்குழாய் என, 20 சென்டிமீட்டர் வரை நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு, அதிலும் 'தக்கன பிழைக்கும்' கோட்பாட்டுடன், தனக்கான இணையான கருமுட்டையுடன் ஒற்றை விந்தணு மட்டும் கூடி, கருத்தரித்தல் எனும் நிகழ்வை நிகழ்த்துகிறது என்பதை அறிவோம்.

இந்த இயற்கை நிகழ்வில் அதிக அசைவுத்திறன் உள்ள செறிவான விந்தணுக்களை மட்டுமே அண்டவிடுப்பின்போது, அவற்றின் பயணத்தைக் குறைக்க வேண்டி கருப்பைக்குள் தரும் ஒரு நுட்பம்தான் இந்த ஐ.யூ.ஐ. எனும் செயற்கை விந்தூட்டல் முறை. எளிதில் சொல்ல வேண்டுமென்றால், பாலுறவு இல்லாமலே கருத்தரிப்புக்கு மேற்கொள்ளப்படும் எளிய சிகிச்சைதான் இது.!

செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை

ஆணா, பெண்ணா... யார் காரணம்?

இயல்பாக கருத்தரிக்க இயலாத காரணங்கள் ஆணிடம் இருக்கும்போது அதிகம் மேற்கொள்ளப்படும் இந்தச் செயற்கை விந்தூட்டல் சிகிச்சை, சமயங்களில் காரணங்கள் பெண்ணிடம் இருக்கும்போதும், 'unexplained infertility' எனும் அறியவிலாத குழந்தைப்பேறின்மையிலும் மேற்கொள்ளப்படுகிறது. ஆணின் காரணங்களாக, முற்றிலும் விந்தணு இல்லா நிலை (azoospermia) ஒருபுறமும், விந்தணுக்களின் எண்ணிக்கை, அசைவுத்திறன் மற்றும் உருவமைப்பு இயல்பிலிருந்து குறைந்து காணப்படும் (OAT- Oligo Asteno Terato spermia) நிலைகள் மறுபுறமும் இருக்க, இவற்றுடன் விரைப்புத்தன்மை குறைபாடுகள் (erectile dysfunction), விந்து வெளியேற்றக் குறைபாடுகள் (ejaculatory dysfunction) மற்றும் Sperm Auto Immunity எனப்படும்

விந்தணுக்களுக்கு எதிரான தன்னெதிர்ப்பு நோய் ஆகியன பொதுவான காரணங்களாக அறியப்படுகின்றன. இவற்றுள் குணப்படுத்தக் கூடிய சர்க்கரை நோய், தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன்கள் குறைபாடுகள், விரைப்பை ரத்த நாளங்கள் வீக்கம் ஆகியவற்றைத் தாண்டியுள்ள காரணங்களுக்காகத் தான் செயற்கை விந்தூட்டல் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதில்

Artificial Homologous Insemination (AIH) என்பது அந்த ஆணின் விந்தணுக்களையே செறிவூட்டிய பின் அவரின் இணையருக்கு செலுத்தும் முறையாகும்.

செயற்கை கருத்தரிப்பு

இது, மேற்சொன்ன OAT syndrome மற்றும் விந்து வெளியேற்றக் குறைகள் அல்லது ஆட்டோ இம்யூன் நிலைகளிலும், பெண்ணின் காரணங்களுக்காகவும் மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம், விந்தணுக்கள் முற்றிலும் இல்லாத azoospermia எனும் விந்தணுவின்மை காணப்படும்போது, Artificial Donor Insemination (AID) எனும் கொடையாளர் விந்தணுக்களை செறிவூட்டிய பின் செலுத்துவது மேற்கொள்ளப்படுகிறது. பெண்ணின் காரணங்களான யோனிப்பாதையின் தசை இறுக்க வெஜைனிஸ்மஸ் நிலை, கருப்பைவாய் இறுக்கநிலை, கருப்பைவாய் விந்து எதிர்ப்பு நிலை, எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு மற்றும் அறியவிலாத குழந்தைப்பேறின்மை ஆகியவற்றில் இந்தச் செயற்கை விந்தூட்டல் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், கருக்குழாய் அடைப்பு, கருப்பை நோய்த்தொற்று மற்றும் சினைப்பை பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கும், மிகவும் குறைந்தளவிலான விந்தணுக்கள் (severe OAT syndrome) காணப்படும்போதும், இந்தச் சிகிச்சை பலனளிக்காது என்பதையும் இங்கு நினைவில்கொள்ள வேண்டும்.

கொடையாளர் தகவல் வெளியே தெரியுமா?

அது இணையர் விந்தணு அல்லது கொடையாளர் விந்தணு என எந்த வகையானாலும், தம்பதியினர் இருவருக்குமான மற்றும் கொடையாளருக்கான முறையான பரிசோதனைகளுக்குப் பின்னரே செயற்கை விந்தூட்டல் மேற்கொள்ளப்படுகிறது.

முறையான பரிசோதனைகளில் முக்கியமானது HSG (Hystero Salpingo Gram) எனும் கருக்குழாய் அடைப்பின்மையை உறுதிசெய்யும் பிரத்யேக பரிசோதனை. அதனுடன் கருமுட்டை வளர்ச்சி மற்றும் அண்டவிடுப்பை கணிக்கும் ஸ்கேனிங் பரிசோதனையும், ஹெச்ஐவி, ஹெபடைடிஸ் ஆகிய நோய்த்தொற்றிற்கான ரத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

Sperm Donation (Representational Image)

அடுத்து, தம்பதியினர் இருவருக்கும் தகுந்த கவுன்சலிங் வழங்கப்பட்டு, கருத்தரிப்புக்கான வெற்றி வாய்ப்புகள் மற்றும் பக்கவிளைவுகள் குறித்த ஆலோசனைகளும் எடுத்துரைக்கப்பட்ட பிறகுதான், அவர்களின் எழுத்து ஒப்புதலுடன் (written consent) இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதில் donor insemination-ல், விந்தணு கொடையாளரின் வயது, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் விந்தணு வங்கி, கொடையாளர் குறித்த எந்தத் தகவலையும், அதனைப் பெறுபவர்களுக்கு எப்போதும் வழங்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ('காதலிக்க நேரமில்லை' திரைப்படம்)

எப்படி நடக்கிறது சிகிச்சை?

உண்மையில், அதற்கென இருக்கும் பரிசோதனைக் கூடத்தில் (IUI Lab), சேகரிக்கப்பட்ட விந்தணுக்களை, நீர்ம நிலையை அவை எட்டிய பின், 'sperm wash' எனும் நுட்பம் மூலமாக, விந்தணுக்களுக்கு எதிராக விளங்கும் சைட்டோக்கைன்கள், லிம்ஃபோக்கைன்கள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றப் பண்புகளை நீக்கி, அதற்குப்பின் தக்க நீர்மக் களத்தில் (sperm media), 'swim up technique' எனும் நுட்பத்தில் நன்கு நீந்தக்கூடிய செறிவான விந்தணுக்களை அதிகம் சேகரித்து, அவற்றை தக்க சமயத்தில் பெண்ணின் கருப்பைக்குள் ஓர் எளிய குழாய் (cannula) மூலம் செலுத்துவது தான் இந்த ஐ.யூ.ஐ முறையாகும்.

கருத்தரிப்பு..

எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், நமது அன்றாட அரிசி, பருப்பு ஆகியவற்றை முதலில் புடைத்து சுத்தப்படுத்தி, உபயோகத்திற்கு முன், நீரில் கழுவி் வடிகட்டி, பின் சமைப்பதற்கு ஒப்பானதுதான் இந்தச் செயற்கை விந்தூட்டல் முறை எனலாம்.

பொதுவாக, இந்தச் சிகிச்சையின்போது, சிகிச்சை மேற்கொள்ளும் பெண்ணுக்கு கருமுட்டை வளர்ச்சிக்கான மருந்துகள் வழங்கப்பட்டோ (ovulation induction), அல்லது இயல்பான மாதவிடாய் சுழற்சியிலோ (natural cycle), அப்பெண்ணின் கருமுட்டை வளர்ச்சியை ஃபாலிக்குலார் ஸ்கேனிங் மூலமாக அன்றாடம் கணிக்கப்பட்டு, 20 mm அளவை சினைப்பையின் ஃபாலிக்கிள் எட்டும்போது, அதனுள் இருக்கும் முதிர்ந்த கருமுட்டை வெளியேற ஹெச்.சி.ஜி. ஊசி வழங்கப்படுகிறது.

அண்டவிடுப்பு எனும் இந்நிகழ்வின்போது, 12 மணிநேரம் வரை மட்டுமே உயிர்வாழக் கூடிய கருமுட்டையை, கருக்கட்டல் நிகழ்விற்குத் தயார்ப்படுத்த, ஒருமுறை அல்லது இருமுறை செயற்கை விந்தூட்டல் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதில் குறுகிய காலத்திற்குள், அதாவது அண்டவிடுப்பு நிகழ்ந்த 36 மணிநேரத்திற்குள் இந்தச் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகிறது. இந்த ஐ.யூ.ஐ சிகிச்சையில் விந்தணுக்கள் பொதுவாக கருப்பைக்குள் தான் செலுத்தப்படுகின்றன என்றாலும், அரிதாக அவை கருப்பைவாயில் செலுத்தப்படும்போது Intra Cervical Insemination (ICI) என்றும், சினைகுழாய்க்குள் செலுத்தப்படும்போது Intra Fallopian Insemination (IFI) என்றும் வழங்கப்படுகிறது.

கட்டுரையாளர்: மருத்துவர் சசித்ரா தாமோதரன்

ஓரிரு மணிநேர மருத்துவமனை அனுமதி மட்டுமே தேவைப்படும் இந்த எளிய, வலியற்ற சிகிச்சைக்கு மயக்க மருந்தோ, வலி நிவாரணிகளோ தேவையில்லை என்பதால், பொதுவாக புறநோயாளி சிகிச்சையாகவே இது மேற்கொள்ளப்படுகிறது. சிகிச்சைப் பிறகு இயல்பான வாழ்க்கையை, குறிப்பாக அன்றாடப் பணிகளை அப்பெண் எப்போதும் போலத் தொடரலாம் என்பது இதில் வலியுறுத்தப்படுகிறது. ஐ.யூ.ஐ சிகிச்சைக்குப் பின், லூட்டியல் பாதுகாப்பிற்கென, புரொஜெஸ்ட்ரான் மருந்துகள் அடுத்த 15 நாள்கள், அதாவது கருத்தரிப்புக்கான சோதனைக்காலம் வரை, வழங்கப்படும்.

எத்தனை முறை முயற்சி செய்யலாம்?

பொதுவாக இந்தக் கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொள்ளும் தம்பதியினருக்கு, 15-20% வரை வெற்றி வாய்ப்புகள் கிட்டக்கூடும் என்பதுடன், ஒருமுறை சிகிச்சை தோல்வியுறும் பட்சத்தில், 5-6 முறைகள் வரைகூட, இதனை மேற்கொள்ளலாம் என்கிறது மருத்துவ அறிவியல். தோல்விகள் போலவே, இரட்டைக் குழந்தைகளுக்கான வாய்ப்பு, கருக்குழாய் கர்ப்பத்திற்கான (tubal ectopic pregnancy) வாய்ப்பு, வெகு அரிதாக கருப்பை வலி அல்லது நோய்த்தொற்று ஏற்படக் கூடிய வாய்ப்புகளும் இதில் உள்ளதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

செயற்கை கருத்தரிப்பு

உண்மையில் அறிவியலால் உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.யூ.ஐ எனும் செயற்கை விந்தூட்டல் சிகிச்சையானது, கருத்தரிப்பு பிரச்னைகள் மிதமாக உள்ள தம்பதியினருக்கான எளிய, வலியற்ற, மற்ற சிகிச்சைகளைக் காட்டிலும் மிகவும் விலை குறைந்த ஆனால், நல்ல பலன்கிட்டும் சிகிச்சை முறையாகும். இந்த முதலாவதும், முக்கியமானதுமான சிகிச்சை தோல்வியுற்றால் அடுத்து மேற்கொள்ள வேண்டியவற்றை இனி தெரிந்து கொள்வோம்..!

Doctor Vikatan: திருமணம் நிச்சயமான மகளுக்கு திடீரென நின்றுபோன பீரியட்ஸ்: மாத்திரை கொடுக்கலாமா?

Doctor Vikatan: என்மகளுக்கு24 வயதாகிறது. பூப்பெய்தியதுமுதல் இதுநாள்வரை அவளுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகவே வந்துகொண்டிருந்தது. அவளுக்கு இப்போது திருமணம் நிச்சயம் செய்திருக்கிறோம். இந்நிலையில் திடீரென ... மேலும் பார்க்க

Doctor Vikatan: மாதந்தோறும் பீரியட்ஸ் வலி; வெளியேறாத ப்ளீடிங்.. விசித்திர பிரச்னைக்கு தீர்வு என்ன?

Doctor Vikatan: என்னுடைய தோழியின் மகளுக்கு 12 வயதாகிறது. அவள் இன்னும் பூப்பெய்தவில்லை. ஆனால், மாதந்தோறும் அவளுக்கு பீரியட்ஸ் நேரத்தில் ஏற்படுவது போன்ற வலி ஏற்படவே, அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம... மேலும் பார்க்க

செயற்கை கருத்தரிப்பு: கோடிகளில் புரளும் வர்த்தகம்; அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நெறிமுறைகள்!

பன்னிரண்டு மாதங்களுக்கு மேலான பாதுகாக்கப்படாத தொடர் உடலுறவுக்குப் பிறகும், ஒரு தம்பதியருக்கு குழந்தைப்பேறு கிடைக்காத நிலையைத் தான் 'Infertility' எனும் கருவுறாமை நிலை என மருத்துவர்கள் அழைக்கின்றனர். பொ... மேலும் பார்க்க

Doctor Vikatan: எப்போதும் ஈரமாக இருக்கும் உள்ளாடை, ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: என் வயது 42. எனக்கு வெஜைனா பகுதி எப்போதும் ஈரம் கசிந்தபடியேஇருக்கிறது. வெள்ளைப்படுதல் போல அல்லாமல் அந்தக் கசிவு வித்தியாசமாக இருக்கிறது. வெளியிடங்களுக்குச் செல்லும்போதுஇது தர்மசங்கடத்த... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் இடம்பிடித்த தடுப்பூசி; அதன் பலன்கள் என்னென்ன? - மருத்துவர் விளக்கம்! | Explainer

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராக போர் புரிய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஏன் தெரியுமா? உலகளவில் பெண்களை பாதிக்கிற புற்றுநோய்களில் இது நான்காவது இடத்தில் இருக்கிறது. 'நான்காவது இடத்தில் இர... மேலும் பார்க்க

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் குழந்தையின் அசைவு எந்த மாதத்தில் தெரியும்?

Doctor Vikatan: என் வயது 26. இப்போது ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறேன். பார்ப்பவர்கள் எல்லாம் குழந்தையின் அசைவு தெரிகிறதா என்று கேட்கிறார்கள். ஆனால், எனக்கு அது தெரியவில்லை. குழந்தையின் அசைவு தெரியாதது ... மேலும் பார்க்க