செய்திகள் :

சொல்லப் போனால்... ஓ ரசிக்கும் சீமானே, ஜொலிக்கும் உடையணிந்து...

post image

காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்துத் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசை அமைத்து முதன்முதலாக காங்கிரஸ் அல்லாத முதல்வராகப் பொறுப்பேற்றவர் அண்ணா.

முதல்வராக அண்ணா பொறுப்பேற்ற பின் முதன்முதலில் அமெரிக்கா உள்பட சில வெளிநாடுகளுக்கான பயணம் திட்டமிடப்பட்டது. அந்தக் காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வோரில் பலரும் கோட் – சூட் அணிந்திருப்பார்கள். நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது என்ன உடைகளைக் கொண்டுபோவென்ற பேச்சும் வந்திருக்கிறது. அண்ணாவோ இப்படியே போக வேண்டியதுதான் என்றிருக்கிறார். மற்ற நண்பர்களோ, அதெல்லாம் கூடாது அண்ணா, வெள்ளைக்காரர்கள் நாட்டுக்குப் போகிறீர்கள், கோட் – சூட்டோடு போனால்தான் மதிப்பாக இருக்கும் என்று வற்புறுத்தியிருக்கின்றனர்.

ஒரே ஒரு பயணத்துக்காக அவ்வளவு பணம் செலவழிக்க விரும்பவில்லை  அண்ணா. அவர்களுடன் இருந்த தனக்கு மிகவும் நெருக்கமானவரும் திரைப்பட – நாடக நடிகருமான எஸ்.எஸ்.ஆர். என்ற எஸ்.எஸ். ராஜேந்திரனிடம் நாடகங்களில் பயன்படுத்துகிற கோட் – சூட் ஏதாவது இருந்தால் தருமாறும் தேவைப்பட்டால் ‘ஆல்டர்’ செய்துகொள்ளலாம் என்றும் கேட்டுக்கொண்டாராம்.

எஸ்எஸ்ஆரோ, என்னண்ணா, இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? நீங்கள் எதற்காக பயன்படுத்தியதை அணிய வேண்டும்? உங்களுக்கு ஒரு கோட் – சூட் தைத்துத் தர மாட்டேனா? என்று கோபித்துக்கொண்டு, அண்ணாவுக்கே அளவெடுத்துப் புதிதாக கோட் – சூட் தைத்துக்கொண்டுவந்து கொடுத்தாராம். இவ்வாறாகத்தான் கோட் – சூட் அணிந்து காட்சி தந்தார் முதல்வர் அண்ணா.

அண்ணாவுக்குப் பின்னர் திமுக தலைவர் மு. கருணாநிதி, தமிழ்நாட்டின்  முதல்வர் பொறுப்பேற்று வெளிநாட்டுப் பயணம் சென்றபோது, முதல்முறை மட்டும் கோட் – சூட் அணிந்து சென்றார். இவர்கள் எப்போதுமே வேஷ்டி – சட்டை அணிபவர்கள். பார்க்க வேறு லெவலில் இருந்திருக்கிறது.

தொடர்ந்து முதல்வரான எம்.ஜி.ஆருக்கு கோட் – சூட் புதிதல்ல. திரைப்படங்களில் நிறைய அணிந்து பழக்கப்பட்டவர்.

பின்னாளில் முதல்வர்கள் எடப்பாடி கே. பழனிசாமி, மு.க. ஸ்டாலின் இருவருமே கோட் – சூட் அணிந்து வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கின்றனர். இந்தியாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலேயே கோட் – சூட்டில் வந்திருக்கிறார் ஸ்டாலின். அவ்வப்போது டிராக் ஷூட் – டி ஷர்ட்களிலும்கூட முதல்வர் ஸ்டாலினைப் பார்க்கலாம்.

அகில இந்திய அளவிலும் பிற மாநிலங்களிலும்கூட சில அரசியல் தலைவர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும்போது தங்கள் உடைகளை  மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், குளிர் மிகுந்த ரஷியா உள்பட வெளிநாடுகளுக்கு காங்கிரஸ் தலைவர்  காமராஜர் சென்றபோது, இப்படியெல்லாம் எதையும் மாற்றிக்கொள்ளவில்லை. எப்போதும்போல கட்டியிருக்கும் வேட்டி – சட்டையுடனேயேதான் சென்று திரும்பினார் (இதற்காக காமராஜரைக் கேலி பேசியவர்களும் இருக்கிறார்கள்).

ஆமாம், தலைவர்களின் இந்த வெளிநாட்டுப் பயணங்கள், ‘கோட் – சூட்’ கதைகள் எல்லாம் இப்போது எதற்காக சம்பந்தமில்லாமல் என்று கேட்டால்...

கடந்த வாரத் தொடக்கத்தில் அமர்க்களப்பட்ட பிரதமர் மோடியின் புகைப்படம் ஒன்றுதான்!

ஜம்மு – காஷ்மீரில் சோனாமார்க் சுரங்கப் பாதைத் தொடக்க விழாவில் பங்கேற்ற  பிரதமர் நரேந்திர மோடி, திரைப்படங்களிலும் பெரும்பாலும் இன்றைய இளைஞர்களும் அணிகிற, தலையையும் சேர்த்துப் போர்த்திக் கொள்ளும் ஹூடி (Hoddie) ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார் – இதுவரை பார்த்திராத தோற்றம்!

ஹூடி அணிந்தபடிதான் சுரங்கப் பாதையில் வாகனத்தில் சென்றார்; நடந்தும் சென்றார். ஒருவேளை காஷ்மீரின் குளிரைக் கருதி என்றால் விழாவில் பங்கேற்ற -  ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா உள்பட  - ஒருவரும் ஹூடி அணிந்திருக்கவில்லை – எக்ஸ்க்ளூசிவ் லுக்!

கில்லி - மெர்சல் போன்ற திரைப்படங்களில் இதேமாதிரி ஹூடி உடை அணிந்துவருவார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய். இளம் நடிகர்கள் சிலர் திரைப்படங்களில் இந்த காஸ்ட்யூமில் தோன்றியிருக்கின்றனர். இந்தத் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு - கொளுத்துகிற வெய்யிலிலும் – இப்போது  சென்னை போன்ற பெருநகரங்களில் இளைஞர்கள் இவ்வாறு அலைவதைப் பார்க்கலாம் – ஸ்டைல்!

இதுவரையிலான காலகட்டத்தில் தலைவர்கள் ஏதாவது பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அல்லது பண்பாட்டுப் புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்லும்போது, அங்கிருக்கிற மக்கள் தங்களுடைய பாரம்பரிய உடைகளைத் தலைவர்களை அணியவைத்து அழகு பார்ப்பார்கள் – தலைவர்களின் வழக்கமான தோற்றத்துக்கு மாறாகப் பார்க்க வித்தியாசமாக இருக்கும்.

ஆனால், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போதே அந்த ஊர்களின், அந்தந்த மக்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுவிட்டார் பிரதமர் மோடி.

தவிர, கலந்துகொள்ளும் விழாக்களிலும் வித்தியாசமான ஆடைகளை – அலங்காரங்களுடன் காட்சி தரும் மோடி, ஒவ்வொரு நிகழ்ச்சியின்போது இன்று எத்தகைய காஸ்ட்யூமில் வெளிப்படுவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மக்கள் மத்தியில் – க்யூரியாசிட்டி!

பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு காட்சி தந்த சில பல நூறுகளுக்கும் மேலான (சரியான எண்ணிக்கை யாரிடமாவது இருக்கிறதா என்று தெரியவில்லை, கூகுளில் தேடினால் வித்தியாசமான எண்ணற்ற தோற்றங்கள் காணக் கிடைக்கின்றன. ஒருவேளை மோடியின் ஆடை வடிவமைப்பாளர்களிடம் இருக்கக் கூடும், மீண்டும் மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவேனும்) ஆடை – அலங்காரத் தோற்றங்களிலேயே மிகவும் தூக்கலானதாக – சூப்பர் ஸ்டைல் என்றால் – ஹூடியில் வந்த மோடிதான்!

இத்தகைய புதுப்புது ஆடை அலங்கார காட்சியளிப்பில் – சிறப்புத் தோற்றங்களில் தோன்றுவதில் - மோடியினுடைய சாதனைகளை அவரே முறியடித்தால் மட்டுமே உண்டு; இன்னொருவர் வருவதற்கோ, அல்லது இப்போதைக்கு உருவாவதற்கோ வாய்ப்பே இல்லை – அதுவும் இந்த ஹூடி ஸ்டைல் எல்லாம் வேற லெவல்! (ஆனால், அறிவியல் புனைவு ஹாலிவுட் திரைப்படமான ஸ்டார் வார்ஸில் வருகிற கற்பனையான வில்லன் பாத்திரமான டர்த் வடேர் – இதேமாதிரியான ஆடை அலங்காரம் - ரிடர்ன்ஸ்! என்று குறிப்பிட்டுக் கிண்டலடித்திருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா. சமூக ஊடகங்களில் ஸ்க்விட் கேம் வில்லன் ஸ்டைல் என்று ட்ரோல் செய்தார்கள்).

ஆமாம், இந்த விஷயத்தில் இதுவரை இந்திய நாட்டின் எந்தப் பிரதமருமே செய்யாத சாதனைகளை – ஒருவித கொண்டாட்ட மனநிலையில் -  செய்துகொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி – ஹேட்ஸ் ஆப் சார்.

இந்த விழாவைத் தொடர்ந்து அடுத்த சில நாள்களில், மோடி பிறந்த குஜராத்தில் மேஹ்சனா மாவட்டம் வாத்நகரில் பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்துப் பேசிய மோடியின் நீண்ட கால சகாவும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, உலகம் முழுவதுமுள்ள எத்தனையோ தலைவர்களின் குழந்தைப் பருவங்களைப் பற்றி நான் படித்திருக்கிறேன், ஆனால், ஒருவர்கூட நாட்டுக்கு நரேந்திர மோடி செய்த அளவுக்குச் செய்யவில்லை என்று பாராட்டியிருக்கிறார்.

“குஜராத் முதல்வராக இருந்த காலந்தொட்டுப் பிரதமரான வரையிலும் இந்த நாட்டின் மீதான மோடியின் தாக்கம் ஈடு இணையற்றது. தன்னைப் போன்று ஏழ்மையை எந்தக் குழந்தையும் அனுபவிக்கக் கூடாது என்ற நோக்கில் இந்த நாட்டை மேம்படுத்துவதற்காக கொஞ்சமும் சளைக்காமல் மோடி உழைத்திருக்கிறார்.

“எந்தவிதமான அரசியல் திட்டமும் இல்லாமலேயே, ஒடுக்கப்பட்டவர்களுக்கு உழைப்பதற்காகத் தன்னைத்தானே நரேந்திர மோடி அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்” என்ற அமித் ஷா, ஏழை எளிய மக்களுடனான மோடியின் நேரடித் தொடர்பு பற்றிக் குறிப்பிடும்போது, ஓர் ஆர்எஸ்எஸ் பிரசாரகராக இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார்; ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஆழமாக அறிந்திருக்கிறார். ஏழை மக்களுக்கான மோடியின் சேவை என்பது முற்றிலும் அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு அவர்களின் நலன் மீதான அக்கறையில் நிகழ்த்தப்படுகிறது என்றார்.

இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றக் கூடிய அடுத்தடுத்த திட்டங்களைத் தொடக்கிவைக்க அல்லது ஆய்வுகள் மேற்கொள்ள அல்லது மக்களைச் சந்திக்க வரும்போது, அல்லது வெளிநாடுகள் செல்லும்போது, இன்னும் விதவிதமான, வித்தியாசமான ஆடை – அலங்காரங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியைக் காண பிரகாசமான வாய்ப்புகள் மக்களுக்குக் காத்திருக்கின்றன.

டெயில் பீஸ்: ஆமா, தமிழ்நாட்டில் இந்த அரசியல் கட்சித் தலைவர்களில் பெரும்பாலோர் எதற்காக எப்பப் பார்த்தாலும், ஏதோ விதிக்கப்பட்ட சீருடை கணக்கா, வெள்ளை வேஷ்டி – வெள்ளைச் சட்டையிலேயே காட்சியளிக்கிறார்கள்? கொஞ்சம் கலர் கலராகத்தான் மாறிப் பார்க்கலாமே!

இதையும் படிக்க.. சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் திட்டம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சீமான் குறிவைக்கும் இலக்கு!

கே.விஜயபாஸ்கர்ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ள நிலையில் இந்தச் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நாம் தமிழர் க... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!

அமெரிக்காவின் 51-வது மாகாணமாகலாம் கனடா, கிரீன்லாந்து தேவைப்படுகிறது என்றெல்லாம் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பேசும்போது, இவர் எப்போதும்போல தடாலடியாகப் பேசிக்கொண்டிருப்பார், அவ்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

2024 ஆம் ஆண்டில் நாட்டின் ஆகப் பெரிய சாதனைகளில் ஒன்றை யாருமே பொறுப்பேற்றுக் கொள்ள முன்வராததால் ஒருவராலும் கண்டுகொள்ளப்படாமல் கழிந்துபோய்விட்டது.ஆனாலும், விடாது கருப்பு என்பதைப் போல அதுவே ஆக்ரோஷமாக முட... மேலும் பார்க்க

2024 - கௌதம் கம்பீர் வருகை! இந்திய அணிக்கு எழுச்சியா? வீழ்ச்சியா?

தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வருகை இந்திய அணிக்கு எழுச்சியா.. வீழ்ச்சியா? என்பதைப் பற்றி ஒரு கிரிக்கெட் ரசிகனின் பார்வையில்!2024! ஆஹா இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அற்புதமான ஆண்டாகவே அமைந்தத... மேலும் பார்க்க

2024 - பேரவைத் தேர்தல்கள் போரும் களமும்!

2024!உலகம் முழுவதும் ‘தேர்தல்களின் ஆண்டு’ அழைக்கப்பட்ட நிகழாண்டில் இந்தியா மட்டுமின்றி, எங்கெங்கு காணினும் பிரசாரங்களும் பேரணிகளும் அணி வகுத்திருந்தன என்று கூறினால் யாரும் மறுக்கமாட்டார்கள். இந்தியாவி... மேலும் பார்க்க

2024 - போரும் படுகொலைகளும்... காஸாவில் தொடரும் துயரம்!

2024 ஆம் ஆண்டில் பல முக்கிய அரசியல் திருப்புமுனைகளும் போர்களும் உலகம் முழுவதும் நிகழ்ந்துள்ளன. அரசு அதிகாரங்களின் மோதல் போக்குகளால் தொடர்ந்து உலகம் முழுக்க மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில், மி... மேலும் பார்க்க