செய்திகள் :

சொல்லப் போனால்... பகுத்தறிய மறந்த தலைமையும் பாழாய்ப்போன மக்களும்!

post image

முப்பத்தொன்பது உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளன.

கரூரில் சனிக்கிழமை இரவில் நடைபெற்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் நேரிட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறியும் மிதிபட்டும் இறந்தவர்கள் இவர்கள் – 13 ஆண்கள், 17 பெண்கள், என்ன கொடுமை, 4  சிறுவர்கள், 5 சிறுமிகள்! சிகிச்சையில் 51 பேர் இருக்கின்றனர்.

விக்கிரவாண்டியிலும் மதுரையிலும் இரண்டு மாநாடுகளைத் த.வெ.க.வினர்  நடத்தினார்கள். பகல் நேரம், நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தாலும் சின்னச் சின்ன சம்பவங்கள் நடந்தாலும் மருத்துவ உதவிகள் கிடைத்தன.

வார இறுதி நாள் பிரசாரத்தை விஜய் தொடங்கியது முதலே மிகப் பெரிதாக எதையோ பணயம் வைக்கிறார்களோ என்றே தோன்றிக் கொண்டிருந்தது;  கெடுவினையாக அவ்வாறே நடந்தும் விட்டது.

எந்த வகையில் திட்டமிட்டிருந்தாலும் திருச்சியின் முதல் பிரசாரக் கூட்டத்திலேயே  நிறைய குழப்பம். கூட்டம் நடந்த இடத்துக்கு வந்து சேர 5 மணி நேரம் தாமதம். திருச்சியைத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரியும் நடிகர் விஜய் பேசிய மரக்கடை சந்திப்பு எந்த அளவில் இருக்கும் என்பது. வரன்முறையின்றித் தாமதமாகி அரியலூரில் பேசி முடித்தபோது, காலங்கடந்துபோக, பெரம்பலூர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது – காத்திருந்த அவ்வளவு பேரும் நள்ளிரவில் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

நாகப்பட்டினத்திலும் திருவாரூரிலும் ஒரே நாளில் பிரசாரக் கூட்டங்கள். எல்லா இடங்களிலும் இருந்த முதன்மையான பிரச்சினை – விஜய்யின் மைக். எங்கேயும் சரியாகக் கேட்கவில்லை. பல கோடி ரூபாய் வாகனத்திலுள்ள  ஒலிவாங்கியை - ஒலிபெருக்கியைச் சரி செய்ய முடியவில்லை. ஒரு கையில் மைக்கையும் இன்னொரு கையில் தாள்களையும் பிடித்துக் கொண்டு இவர் தன்னுடைய சிற்றுரையை பார்த்துப் பார்த்து வாசிக்கும் (பேசும்) போது மைக்கிற்கும் வாய்க்கும் இடையிலுள்ள தொலைவு மாறிக்கொண்டே இருப்பதாலேயே ஒலிபெருக்கியில் பேச்சு சரியாகவும் தொடர்ச்சியாகவும் விழுவதில்லை; இதனால் கூட்டத்திற்கு வந்திருக்கிற யாருக்கும் சரியாகக் கேட்பதில்லை. இதனாலேயே தொண்டர்கள் அலைமோதினார்கள். அனுபவம் மிக்க எந்தவோர் அரசியல் கட்சிக் கூட்டத்திலும் கூட்டப் பகுதி முழுவதும் குழாய், பாக்ஸ் ஒலிபெருக்கிகளை முன்னதாகவே வைத்துவிட்டு, ஒரே இணைப்பில் தலைவருடைய பேச்சை அனைவருக்கும் கேட்கும்படி செய்துவிடுவார்கள். இங்கோ பரிதாபம்.

உயிர் குடித்த சனிக்கிழமைப் பயணத் திட்டத்திலேயே தொடங்கிவிட்டது முதல் கோணல்! உள்ளபடியே, வட சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் விஜய்  பிரசாரம் செய்யத் திட்டம். ஆனால், பின்னர் நாமக்கல், சேலம் என மாற்றப்பட்டது. கடந்த வாரம் சனிக்கிழமை திருவாரூரில் விஜய் பேசிய பகுதியிலேயே போட்டிக்காக திமுகவும் கூட்டம் நடத்தியதாகக் கருதிக்கொண்டு, சேலத்தை மாற்றிக் கடந்த வாரம் திமுக விழா நடத்திய கரூரை பிரசாரத்துக்காகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது.

நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு விஜய் பிரசாரக் கூட்டம் என்றுதான் சமூக ஊடகத்தில் த.வெ.க. அறிவித்திருந்தது. ஆனால், சென்னையில் விஜய் புறப்பட்டபோதே 8.45 மணி. நாமக்கல்லில் அவர் பேசும்போது பிற்பகல் 2 மணியிருக்கலாம்!

கரூரில் பகல் 12 மணிக்குக் கூட்டம் என்று அறிவிக்கப்பட்டாலும் அனுமதியே பகல் 3 மணி முதல் இரவு 10 மணிக்குதான் பெற்றிருந்திருக்கின்றனர். உச்சிவெய்யிலில் 12 மணிக் கூட்டத்துக்கு 11 மணியிலிருந்தே மக்கள் திரண்டு காத்திருந்தனர். ஆனால், பேசும் இடத்துக்கு விஜய் வந்துசேர்ந்தபோது மாலை 6 மணிக்கு மேலாகிவிட்டது. தொல்லை பிடித்த மைக்கும் உடன் வந்தது. பேச்சில், தான் பேசும் பேச்சு தனக்கே தாமதமாகக் கேட்பதாக நகைச்சுவையாக வேறு சொல்லிக்கொண்டார் விஜய்.

கரூரில் மணிக்கணக்காகக் காத்திருந்த கட்டுக்கடங்காத பெரும் கூட்டம், கடும் நெரிசல். விஜய் சரியாகக்கூட பேசி முடிக்கவில்லை. மின்கம்பங்களில் எல்லாம் ஆள்கள் ஏறியிருந்த நிலையில் மின்சாரமும் நிறுத்தப்பட்டது. தொலைக்காட்சிகளில் நேரலை துண்டிக்கப்பட்டது (கூட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியதாகவும் சொல்கிறார்கள், சில காணொலிகள் பகிரப்படுகின்றன. உறுதியாக எதுவும்  தெரியவில்லை). சிறிது நேரத்திலேயே நெரிசலில் சிக்கி நால்வர் பலி, 9 பேர் பலி, எண்ணிக்கை உயருகிறது என்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்லத் தொடங்கிவிட்டது; நள்ளிரவு 1 மணிவாக்கில் மொத்தம் 39!

உடனடியாக, முழு அரசு எந்திரமும் முடுக்கிவிடப்பட்டது. அடுத்தடுத்துக் கரூரிலேயே இருந்த செந்தில் பாலாஜி, திருச்சியிலிருந்த அன்பில் மகேஸ் என அமைச்சர்கள் விரைந்தனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்தார்; நள்ளிரவிலேயே தனி விமானத்தில் திருச்சி விரைந்து கரூருக்கே சென்றுவிட்டார். குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடியில் தொடங்கி தொடர்ச்சியாக இரங்கல் செய்திகள்.

ஆனால், ஓர் அரசியல் கட்சியின் தலைவராக எப்படிச் செயல்பட்டிருக்க வேண்டும் என்பதுகூடத் தெரியாமல், தன்னைப் பார்க்க, தன் பேச்சைக் கேட்க வந்து, நெரிசலில் சிக்கித் தன்னுடைய ரசிகர்கள் (அல்லது தொண்டர்கள்) 39 பேர் செத்துப்போய் சடலங்களாக மருத்துவமனைச் சவக்கிடங்கில் கிடக்கும்போது, அவர்களுடைய உறவுகள் எல்லாரும் மருத்துவமனை வளாகத்தில் கத்திக் கதறிக் கொண்டிருக்கும்போது, அவர்களைச் சென்று பார்க்காமல், அவர்கள் குடும்பங்களுடன் தோள்கொடுத்து நிற்காமல், எந்தவொரு கட்சியின் தலைவராவது ஏற்கெனவே திட்டமிட்டபடி, விமானத்திலேறி சென்னை திரும்பி, சாகவாசமாக 4 மணி நேரத்துக்குப் பிறகு, ‘இதயம் நொறுங்கிப் போயிருப்பதாக’ இரங்கல் ட்வீட் செய்வார்களா?

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், தவறே இல்லை. நடிகராக இருந்து அரசியலுக்கு வருவதிலும் எந்தக் குறையும் இல்லை. திரையிலிருந்து வந்தாலும் இன்றைக்கும் நாடு போற்றும் நல்ல பல மாற்றங்களுக்குச் சொந்தக்காரர் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். வெறுமனே அவர் பெயரைச் சொல்வது மட்டுமே போதாது. புதிதாகக் கட்சி தொடங்கியிருப்பவர், இளைய தலைமுறையைச் சேர்ந்தவர், ஏதோ செய்ய நினைக்கிறார் என்பதாலேயே பெருமளவில் விஜய்க்கு எதிரான விமர்சனங்கள் குறைவாகவே இருந்தன. இவர் ‘தீவிரமான’ பிரசாரத்தைத் தொடங்கி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியபோதுகூட தலைவர்கள் யாரும் கடுமையாக விமர்சிக்கவில்லை. ஆனால், இப்படியொரு விபரீதம் நேரிடும்போது, இத்தனை உயிர்களைப் பலி கொடுக்க நேரிடும்போது...

இவருக்கெல்லாம் யார் யோசனை சொல்கிறார்கள்? அல்லது யாருடைய யோசனைகளைக் கேட்டு இவர் செயல்படுகிறார்? என்னதான் நினைக்கிறார்? அரசியலுக்கு வருவது தப்பு அல்ல; வந்ததும் அதற்கான அளவில் தகுதிப்படுத்திக் கொள்ளவும்  வேண்டும்தானே. பெருந்துயரமான இந்தத் தருணத்தில் விமர்சனம் வேண்டாம் என்றாலும் இப்போது சொல்லாமல் வேறெப்போதுதான் இவற்றைச்  சொல்வது?

நெரிசலில் பலிகள் நேர்ந்ததே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அரசியல் கட்சியொன்றின் கூட்டத்தில் நேரிட்ட நெரிசலில் சிக்கி இத்தனை பேர் உயிரிழந்திருப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை.

திரைப்படங்களில் தேர்ந்த வசனகர்த்தாக்களால் எழுதித் தரப்பட்டுப் பேசும் வசனங்கள் மட்டுமே அரசியலாகிவிடுவதில்லை; சிறிது நேரம் அப்படிப்பட்ட வசனங்களை உணர்ச்சிபொங்கப் பேசுவதாலேயே ஒருவர் தலைவராகிவிடவும் முடியாது. இப்போது இத்தனை உயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றனவே, யார் பொறுப்பு?

குடும்பங்களைக் காக்க வேண்டிய ஆண்கள், பெண்கள், எவ்வளவோ எதிர்காலக் கனவுகளுடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் எல்லாரும் பலி.

கட்சிகளுக்கு, தலைவர்களுக்கு இப்படிப் பெரிய அளவில் கூட்டம் கூடுவது இதுவரையில் காணாத ஒன்றல்ல. இதைவிட பெரிய கூட்டங்கள் திரண்டிருக்கின்றன; நடிகராக இருந்து முதல்வருமான எம்.ஜி.ஆருக்குத் திரளாத கூட்டமா? அண்ணா, எம்ஜிஆர் எல்லாம் மாலையில் கூட்டம் என்று அறிவித்திருந்தாலும் மறுநாள் விடியற்காலையில்தான்  திடலுக்கு வந்து சேருவார்கள். விடிய விடியக் கூட்டம் அமைதியாகக் காத்திருக்கும்; கேள்விப்பட்டிருக்கிறோம்.

அரசியல் கட்சியாகத் தொண்டர்கள் கட்டுக்கோப்புடன் இருப்பார்கள். தலைவர்கள் ஒரு சொல் சொன்னால் கூட்டமே அமைதியைக் கடைப்பிடிக்கும். விஜய் வீதிக்கு வந்து பிரசாரத்தைத் தொடங்கியதிலிருந்தே கட்டுக்கடங்காத பெருங்கூட்டம். காவல்துறையால் மட்டுமே ஒரு கூட்டத்தைக் கட்டுப்படுத்திவிட இயலாது; முடியவும் முடியாது. அப்படியென்றால், ஒவ்வொரு கூட்டத்திலும் ஆளுக்கொரு போலீஸ்காரரைத்தான் காவலுக்கு நிறுத்த வேண்டியிருக்கும். சாத்தியமுமில்லை.  கட்சியிடமும் கட்சியின் தலைவரிடமும்தான் அந்தச் செல்வாக்கு இருக்க வேண்டும்.

ஆனால், செல்லும் இடங்களில் கட்டுக்கடங்காமல் திரளும் ஒன்றுமறியாத ஆர்வம் கொண்ட ரசிகர்கள் / தொண்டர்கள் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குப் பதிலாக, ஒழுங்குபடுத்துவதற்குப் பதிலாக அந்தக் கூட்டத்தையே தன்னுடைய செல்வாக்கு என மேலும் ஊக்குவித்தால் இப்படியெல்லாம்தான் நேரிடும். விஜய்யின் கூட்டத்துக்கான அனுமதி தொடர்பாக, காவல்துறை மீதும் அரசு மீதும் நிறைய குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் கூட்டங்களை நடத்திக்கொண்டுதானே இருக்கிறார்கள்?

விஜய் கூட்டங்களுக்கு எவ்வித பாரபட்சமுமின்றி அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி த.வெ.க. தொடர்ந்த வழக்கில், தலைவராக இருக்கும் நீங்கள்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்: உயரமான இடங்களில் ஏறிநின்று ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களைக் கட்சித் தொண்டர்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா? என்று கடந்த வாரத்தில்தான் சென்னை உயர் நீதிமன்றம் கேட்டிருந்தது.

விஜய் பிரசார விஷயத்தில் காவல்துறையும்கூட இன்னமும் கறாராக நடந்துகொண்டிருக்கலாம். இவ்வளவு பெரிய கூட்டம் திரளும்போது, ஊருக்கு வெளியே ஏதேனும் பெரிய திடலில் கூட்டம் நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டியதுதானே? எதற்காக நகருக்குள்ளே நடத்தி எல்லாருக்கும் இடைஞ்சல் ஏற்படுத்த வேண்டும்? கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்றால் அனுமதியை மறுத்திருக்க வேண்டியதுதானே?

இந்த மக்களும்தான் கொஞ்சமேனும் யோசிக்க வேண்டாமா? தலைவர், எந்தப் புரட்சியை நடத்தி முடித்துவிட்டு வருகிறார்? எந்த நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றுத் திரும்புகிறார்? தங்களுக்காக என்னதான் செய்யப் போகிறார்?

அல்ல, ரசிக்கும் நட்சத்திரம்தான் என்றால், இந்தக் கூட்டத்தைவிட மிக நெருக்கமாகத்  தொலைக்காட்சியில் பார்க்க முடியுமே? எதற்காக உயிரைப் பணயம் வைத்து இப்படிப் பெருங் கூட்டமாகத் திரள வேண்டும்? அதுவும் இத்தனை சின்னஞ்சிறுசுகளையும் உடன் அழைத்துக் கொண்டு? எத்தனை பெண்கள்?

இரு மகள்களுடன் இறந்துபோய்விட்டார் ஒரு பெண். எத்தனை குடும்பங்கள் ஆதரவற்றதாகிவிட்டன? அரசு தரும் உதவித்தொகைகளைத் தாண்டி இந்தக் குடும்பங்களின் எதிர்காலம் என்னவாக இருக்கப் போகிறது? இந்த இழப்பை, நடிகர் விஜய் உள்பட யாரால், எப்படி ஈடு செய்ய முடியும்? இவர்கள் மணிக்கணக்காகக் காத்திருந்தது மரணத்துக்காகத்தானா?

எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. தலைவர் அப்படி. தொண்டர்கள் இப்படி!

மாநிலத்தின் முதல்வரான மு.க. ஸ்டாலின், சென்னையிலிருந்து அதிகாலை 3.20 மணிக்கு கரூர் மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்; சிகிச்சையில் இருப்பவர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கிறார். அதிகாலை 3.50 மணிக்குச் செய்தியாளர்களையும் சந்தித்துவிட்டார். யாரைப் பற்றியும் எதுவும் சொல்லவில்லை. விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற வில்லங்கமான ஒரு கேள்விக்கு, விசாரணை கமிஷன் அறிக்கைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முடித்துக்கொண்டார்.

நம்பிக்கை நட்சத்திரமாக மக்கள் நம்பி வந்த கட்சியின் தலைவர் விஜய்யோ விரைந்து சென்னைக்குத் திரும்பிவிட்டார்.  

தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு, தன்னை நம்பிவந்தவர்களுக்கு, சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இத்தனை பெரிய துயரம் நிகழ்ந்திருக்கும்போது, உடனடியாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதுகூட தெரியாத ஒருவராக இருந்துகொண்டு, என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி உருப்படியான யோசனை எதுவும் தெரியாதவர்களைச் சுற்றிலும்வைத்துக் கொண்டு, எதிர்காலத்தில் என்ன சாதிக்கப் போகிறார் ‘ஆளப் போறதாக நினைத்துக்கொண்டிருக்கும் தமிழன்’ த.வெ.க. தலைவர் விஜய்?

வந்தோமா, போனோமா என்றிருக்க நிச்சயம் இதுவொன்றும் சினிமா படப்பிடிப்பு கால்ஷீட் அல்ல; அரசியல், வெகுமக்கள், மக்கள் கூட்டம், நாட்டின் எதிர்காலம். எல்லாவற்றுக்கும் மேலாக விலை மதிக்க முடியாத உயிர்கள். ஆனால், இப்போது இந்தக் கொடிய சம்பவத்தின் மூலம் எல்லாருமாகச் சேர்ந்து, 39 பேருடன் சேர்த்துக்  கட்சியின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டிருக்கிறார்கள்.

திரைப்படங்களில் பேசுகிற வசனங்களையே திருப்பிப் பேசுவதும் சகட்டுமேனிக்கு எல்லாருக்கும் சவால் விட்டுக்கொண்டிருப்பதும் மட்டுமே அரசியலாகிவிடாது. ‘தத்துவமில்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவார்கள்’ என்று ‘விடுதலை’ திரைப்படத்தில் வருகிற வாத்தியார் கூறுவார் (இதுவும்கூட யாரோ எழுதிக் கொடுத்த வசனம்தான்!).

விஜய்யின் பெரும் பலமாக இருந்ததும் தானாகச் சேரும் இந்தக் கூட்டம்தான். இந்தக் கூட்டத்தைக் கண்டுதான் எல்லாரும் வியந்தார்கள்; பயந்தார்கள். ஆனால், சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது என்பார்கள். வெள்ளாமை வருகிறதோ, இல்லையோ, பரவாயில்லை; கூட்டம் கேட்கப் போன மக்கள் மட்டுமாவது பத்திரமாக வீடு வந்து சேர வேண்டும் அல்லவா?

Continuation of the death of 39 people in a stampede during the Karur TVK Vijay campaign...

இதையும் படிக்க... சொல்லப் போனால்... உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

அம்மாவும் அவர் தொண்டும் - மனிதத்தின் மீதான எல்லையற்ற அன்பு, உலகளாவிய ஓர் ஆன்மிக ஒளி!

கேரள மாநிலம், கொச்சியில் 1,100 படுக்கைகளுடன் ஓர் அதிநவீன பன்னோக்கு மருத்துவமனை. மற்றொன்று, 2,500 கி.மீ. தொலைவில் ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் 2,600 படுக்கைகளுடன் 36 லட்சம் சதுர அடி பரப்பு கட்டடங்களுடன் ... மேலும் பார்க்க

அவதூறு, கிரிமினல் குற்றமென்பது அகற்றப்பட உரியதே!

தமிழகத்தைச் சேர்ந்தவரான உச்ச நீதிமன்ற நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ் இரண்டு நாள்களுக்கு முன்பு (செப். 22, 2025) "இந்தியாவில் அவதூறு சட்டத்தின் குற்றவியல் அம்சத்தைக் (Decriminalising Defamation) கைவிட வே... மேலும் பார்க்க

உளவியலின் குரோமோசோம்... கிரேக்க இயக்குநர் யோர்கோஸ் லாந்திமோஸ்!

ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்... என்ற புளித்துப்போன பெரும்பாலான திரைப்படங்களுக்கு மத்தியில் வித்தியாசமான ஒரு சூழ்நிலையை உருவாக்கி அதில் உலாவரும் கதாபாத்திரங்கள் மூலம் சமூகத்தின் கோட்பாடுகளை யோர்கோஸ் ... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் காலமாகிவிட்டார். திரையுலகப் பிரபலங்கள் எல்லாரும் அஞ்சலி செலுத்தினர். அத்தனை ஊடகங்களும் அவருடைய மறைவுக்காகச் சிறப்புச் செய்திகளை வெளியிட்டன; ஒளிபரப்பின. அவரைத் தெரிந்தவர்கள்... மேலும் பார்க்க

தேசிய கீதங்கள்: திருத்தங்கள், மாற்றங்கள், காரணங்கள்!

தேசிய கீதங்கள் என்பது ஏதோ மற்ற பாடல்களின் வரிகளைப் போல வெறும் இசையுடன் கூடிய சாதாரணப் பாடல் வரிகள் அல்ல. தேசிய கீதங்களின் வரிகளும் அவற்றுடன் இணைந்த இசையும் அந்தந்த நாட்டின் வரலாறு, சுதந்திரத்திற்கான எ... மேலும் பார்க்க

அமெரிக்காவைத் துப்பாக்கிகளால் அலறவிடும் இளைஞர்கள்!

அமெரிக்காவில் புகழ்பெற்ற காப்பீட்டு நிறுவனத்தின் தலைவரை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்று ஓராண்டுகூட முடியாத நிலையில், அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க்கைச் சுட்டுக் கொன்றிருக்கிறார் 22 வயதேயான இள... மேலும் பார்க்க