செய்திகள் :

சொல்லப் போனால்... மட்டையா, மரக்கலமா, விஜய்யின் த.வெ.க.?

post image

ஒரு டீசருக்கே முழுப் படத்துக்கான வேலைகள் அனைத்தையும் மேற்கொண்டு ரிலீஸ் செய்தாற்போல இருக்கிறது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரிலான தொடக்க விழா மாநாடு!

தமிழ்நாட்டில் வெள்ளித் திரையின் மின்னலை நம்பி அரசியல் கட்சிகளைத் தொடங்கி வெற்றி பெற்றவர்களைவிடத் தோற்றுப்போனவர்களின் பட்டியல்தான் மிகவும் நீளமானது; தொடங்காமலேயே தோல்வியை ஒப்புக்கொண்டு விலகிய  சிலரும் இருக்கிறார்கள்.

வென்றவர் ஒருவர், அவர் எம்.ஜி.ஆர். நடிகர் என்பதால் மட்டுமே அவர் வெற்றி பெறவில்லை. மிக வலுவான அரசியல் பின்புலம் அவருக்கு இருந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸை வீழ்த்தி திராவிட இயக்க (தி.மு.க.) அரசு அமைந்ததில் அவருடைய பங்களிப்பை யாராலும் மறுதலிக்க முடியாது. கட்சியிலிருந்து விலக்கப்பட்ட பிறகு, அவர் உயிருடன் இருக்கும் வரை திமுகவால் மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதையும் நினைக்க வேண்டும்!

வெற்றிக்கு மிக நெருக்கமாக வந்தவர் நடிகர் விஜயகாந்த். அப்படியே ‘டிட்டோ’வாக எம்ஜிஆர் பார்முலா. திரைப்படங்களிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி. மேலும், எளிய மக்களுடன் நல்ல பழக்கமும் நெருக்கமும். தவிர, அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் அவருக்கென ஒரு பார்வை இருந்தது. தக்க நேரத்தில் சில தலைவர்களும் அவருடன் இணைந்துகொண்டனர். சரியான நகர்த்தல் மூலம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக வர முடிந்த அவரால், உணர்ச்சிவசப்பட்ட ஒரு தவறான நகர்த்தலால் அடுத்த கட்டத்தைத் தொட முடியாமலேயே போய்விட்டது. எத்தனை ஆண்டுகள் அமிழ்ந்துகிடந்தாலும், மரணத்தின்போது விஜயகாந்தின் செல்வாக்கு சிறப்பாக வெளிப்பட்டது.

எம்ஜிஆர் காலத்தில் அவருக்கு இணை வைத்துப் பேசப்பட்டவர் என்பதுடன் காங்கிரஸ் பின்புலமும் கொண்டவரான சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி. ராஜேந்தர், நடிகர் கார்த்திக், நடிகர் சரத்குமார், ஜெயலலிதா பிடித்து வைத்ததால் பிள்ளையாரான கருணாஸ், கடைசியாக அல்ல, லேட்டஸ்ட்டாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் (திமுக வாக்குறுதியளித்திருப்பதால் விரைவில் மாநிலங்களவை உறுப்பினராகிவிடுவார்!) – அரசியலில் இவர்களின் இடங்கள் எங்கெங்கே என்பது அனைவருக்குமே தெரியும். ரஜினிகாந்த் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

விஜயகாந்த் விட்ட இடத்திலிருந்து தங்களுக்கான அரசியலை அல்லது அரசியல் கட்சியைத் தொடங்கி அவர் சாதிக்காமல் போனதைச் சாதிக்கலாம் என நடிகர் விஜய்யோ அல்லது அவரை ஆதரிப்பவர்களோ / முன்னிறுத்துபவர்களோ நினைத்திருக்கலாம். ஆனால்...

மாநாட்டில் கதை சொல்வதில் தொடங்கி, மேடை நடைபாதையில் நடந்து சென்று தொண்டர்கள் தூக்கிப் போட்ட துண்டுகளை விறுவிறுப்பாகச் சேகரித்துக் கழுத்தில் அணிந்துகொண்டது உள்பட அனைத்துமே முன்பே திட்டமிடப்பட்டவை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மறுக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.

துண்டு வாங்கும் படலம்...

பேச்சின்போது திடீரென தடைப்பட்டுத் தொடர்ந்து என்ன பேசுவதெனத் தெரியாமல் அல்லது முடியாமல் சில நிமிஷங்கள் நிறுத்திக் காத்திருந்து அல்லது யோசித்து விஜய் பேசியது மட்டும் ஒருவேளை திட்டமிடப்படாத ஒன்றாக இருக்கலாம். சினிமா ஷூட்டிங் என்றால் அந்த இடத்திலேயே கட் கட் என்று எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, மீண்டும் ரீ டேக் போகலாம். பின்னர், விடுபட்ட இடங்களை எடிட்டிங் டேபிளில் வெட்டி இணைத்துக்கொண்டுவிடலாம். இங்கே நேரில் - அரசியல் மேடையில் பேசித்தானே தீர வேண்டும். பிறகு தொடர்ந்து பேசினார் என்பது வேறு விஷயம்.

வெற்றிகரமான நடிகருக்காக ஒரு வெற்றிப் படம் எடுத்துவிட வேண்டுமென்றால் ஒரு பத்து, பதினைந்து துணை, உதவி இயக்குநர்கள் ஒன்றாக அமர்ந்து கதையை விவாதிப்பார்கள், காட்சிகளைத் திரட்டுவார்கள், எந்தெந்தப் படங்களில் எந்தெந்த மாதிரி காட்சிகளை மக்கள் ரசித்தார்கள் / நகைத்தார்கள், எந்தெந்த மாதிரி காட்சிகளை எல்லாம் ரசிப்பார்கள் / நகைப்பார்கள் என விவாதித்து உருவுவார்கள். பிறகு இயக்குநருடன் கலந்தாலோசித்து உருக்கொடுத்து, தொடர்ந்து வெற்றி நடிகரிடம் கதையைச் சொல்லி, எம்ஜிஆர் மாதிரி என்றால் திருத்தங்களையும் சேர்த்துக்கொண்டு, ஒரு படத்தின் தயாரிப்பு தொடங்கும், நிறைய பேரின் நேர்முக, மறைமுக பங்களிப்புடன்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில், நிறுத்தப்பட்டிருந்த தலைவர்களின் கட் அவுட்களில் தொடங்கி கொள்கை விளக்கம் வரையிலும் இந்த ‘பிராட்பேண்ட் காம்ப்ரமைசிங் பார்முலா’ சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டிருக்கிறது எனலாம்.

தமிழ்நாட்டில் திராவிடம் பேசாவிட்டால் ஆகாதெனக் கருதி பெரியார், தேசிய அரசியலுக்காக காமராஜர், அப்படியே தமிழ்த் தேசியத்துக்கும் ஆச்சு, முக்குலத்தோருக்கும் ஆச்சு என வேலு நாச்சியார், தலித் மக்களைத் திருப்திப்படுத்த அம்பேத்கர், வன்னியர்களை எப்படி விட்டுவிட முடியுமென அஞ்சலையம்மாள், தமிழுக்காகத் (பிஜேபி மாடல்!) தமிழன்னை, தமிழர்களுக்காகவும் தமிழ்த் தேசியத்துக்காகவும் சேரர், சோழர், பாண்டியர் (தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான சாதிக்காரர்களும் இந்த மன்னர்களில் எவராவது ஒருவருடைய வழிவந்தவர்கள் என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பதால்), மாநாட்டு வாசலில் இன்னமும் கொஞ்சம் மன்னர்கள், தலைவர்கள், மேடையில் கொஞ்சம் தியாகிகள்... அப்பாடி, எல்லாரையும் கவர் பண்ணியாச்சா? ஆச்சு. சிறுபான்மையினருக்குத்தான் பிரதிநிதித்துவம் காணப்படவில்லை போல, மறந்துவிட்டார்களா? தவிர்த்துவிட்டார்களா? (ஆனால், மேடையிலேயே கட்சித் தலைவர்களில் ஒரு பெண்மணி இருந்தார்).

இதே பாணிதான் கொள்கைப் பிரகடனங்களிலும். இப்போதெல்லாம் திராவிடத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்கும்தான் பெரிய குத்துவெட்டே நடந்துகொண்டிருக்கிறதே, இவரு பாட்டுக்குத் திராவிடம் ஒரு கண், தமிழ்த் தேசியம் ஒரு கண் என்று கூறிவிட்டார். அதது ஒவ்வொரு பக்கம் பார்த்தால் ஆபரேஷன் செய்துதான் திருத்த வேண்டியிருக்கும். ஆனாலும் விஜய்யோட டார்கெட் சரிதான் போல. சரியாக, ஒரு வாரத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் கடுகடுவெனக் கொட்டித் தீர்த்திருக்கிறார். லாரியில் அடிபட்டுதான் சாக வேண்டியிருக்கும் என்ற சாபத்துடன். இட ஒதுக்கீடு, சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றியெல்லாம் தமிழ்நாட்டில் பேசித்தானே தீர வேண்டும்; ஸோ, ‘தலைவர்’  விஜய் பேசியிருக்கிறார்.

நல்லாதான் பேசினார், அதுவும், அது பாசிசம் என்றால், இது என்ன பாயசமா? என்ற வசனம் எல்லாம் ரொம்ப ரொம்ப சூப்பர். என்ன, மக்கள் ஒருவேளை கொஞ்சூண்டு யோசித்தும் பார்க்க நேரிட்டுவிட்டால்... அந்த பாசிசமோ, இந்த பாசிசமோ? எந்தவொரு பாசிசத்தை எதிர்த்தாவது இத்தனை ஆண்டுகளில் ஏதாவது ஒரேயொரு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்கிறாரா விஜய்? அல்லது ஒரு குண்டை அல்ல, குண்டூசியையாவது வீசியிருக்கிறாரா? பாசிச எதிர்ப்பில் பலியானவர்கள் யாரைப் பற்றியாவது, ஏதாவது தெரியுமா?

ஆட்சியில் பங்கு என்றொரு தூண்டிலைப் போட்டு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைப் பற்றி எதுவும் கூறாமல் ஒரு துண்டையும் போட்டுவைத்திருக்கிறார் விஜய். ஊழலைப் பற்றி இந்த அளவு பேசுகிறவர் எப்படி அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வார்? இருக்காது, சொல்ல மறந்திருப்பார் என்று நினைக்கும் வெள்ளந்தி மனசுக்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால், விஜய் பற்றிய கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்வதைத் தவிர்த்துவிட்ட அதிமுக பொதுச்செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியோ, அவருடைய கொள்கையை அவர் சொல்கிறார்; தமிழ்நாட்டைப் பொருத்தவரை திமுக – அதிமுக இரு துருவ அரசியல்தான். இதற்கு நடுவே எத்தனையோ பேர் முயன்று பார்த்திருக்கிறார்கள், எதுவும் வெற்றி பெறவில்லை என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார். எனினும், விஜய் கட்சி பற்றி விமர்சனங்களைத் தவிர்க்குமாறு அதிமுகவினருக்குச் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

சரி, இதுவரை இல்லாத வகையில் நடிகர் விஜய் கட்சி தொடங்கியது பற்றி மட்டும் இந்தளவுக்குப் பேசப்படுகிறதே? வலுவான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன!

எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் தவிர இதுவரை கட்சி தொடங்கிய நட்சத்திரங்கள் எல்லாம்  திரையுலகில் கிட்டத்தட்ட மார்க்கெட் இழந்த பிறகு அல்லது கடை கட்டப்பட வேண்டிய நேரத்தில் கட்சிகளைத் தொடங்கியவர்களே. ஆனால், வசூலில் முதலிடத்தில் – புகழின் உச்சத்தில் - இருக்கும் நிலையில், தான் இனித் திரைப்படங்களில்  நடிக்கப் போவதில்லை என்று அறிவித்து (அதிர்ச்சியளித்து) விட்டுக் கட்சி தொடங்குகிறார் விஜய் (கோட் மாதிரி இன்னொரு படத்தை எடுத்து நடிப்பதற்குப் பதிலாக இவர் கட்சி தொடங்குவதே எல்லாருக்கும் நல்லது என்கிறது சிலருடைய மைண்ட் வாய்ஸ்!). எப்படிப் பார்த்தாலும் இன்னும் சில பத்தாண்டு காலம் இவரால் நடிக்க முடியும், பல நூறு கோடிகள் சம்பாதிக்கவும் முடியும்! ஆனால், விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார்.

[கட்சி மாநாட்டில் விஜய் பேசி முடித்த சிறிது நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு  சென்னையில் மணலிப் பக்கமிருந்து பிராட்வே செல்லும் பேருந்தில் திருவொற்றியூர் கோவிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த இரு பெண்கள் – சுமார் 50 வயது இருக்கலாம் – பேசிக்கொண்டு வந்தார்கள்: “என்ன இருந்தாலும் கோடி கோடியாக சம்பாதிக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு, இந்த கொஞ்ச வயசில் மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன் என்று வருகிறார் அல்லவா? பாராட்டத்தான் வேண்டும். சிலரைப் போல சாகிற வரைக்கும் நடிச்சே தீருவேன், சம்பாதிச்சே ஆகணும்னு நினைக்கலியே.”]

தவிர, இன்றைக்கு திமுக, அதிமுக உள்பட பெரிய கட்சிகளேகூட கோடிகோடியாகக் கொட்டிச் செலவு செய்யாமல் அல்லது பணம் கொடுக்காமல் இத்தனை பெரிய மாநாட்டை நடத்தவே முடியாது. இத்தனை லட்சம் மக்களைத் திரட்டவும் முடியாது (என்பது அவர்களுக்கே தெரியும்). ஆனால், விஜய் கட்சியின் மாநாட்டைப் பொருத்தவரை மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு யாரும் எங்கேயும் பணம் கொடுத்ததாகத் தகவல் இல்லை. வாகனங்களுக்கு என்றுகூட எங்கேயும் தரப்படவில்லை. துட்டு கொடுக்காமல் திரளும் கூட்டம் என்பது பெரிய பெரிய கட்சிகளுக்கே இயலாத விஷயம். விஜய்யின் இந்தச் செல்வாக்குதான் மிகப் பெரிய பிளஸ்! (விஜயகாந்த்துக்கும் கட்சி தொடங்கும்போது இப்படிதான் இருந்தது).

நடிகர் விஜய்யின் ரசிகர்களாக இருந்து அப்படியே அவருடைய கட்சியின் தொண்டர்களாக உருமாறப் போகிறவர்கள் அனைவரும் இளைய தலைமுறையினர். இவருடைய ரசிகர்கள், இளைஞர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளை அப்படியே விட்டுவிட்டு இங்கே வந்துவிடும் வாய்ப்புதான் மிகவும் அதிகம். இன்றைய நிலவரப்படி தமிழக அரசியல் கட்சிகளில் அதிக அளவில் இளைஞர்கள் இருக்கக் கூடியவை மிகவும் சொற்பம்தான் – நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள்! தமிழ்த் தேசியத்தில் பங்குபோட்டுப் பேசும் த.வெ.க.வுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கிவிட்டார் சீமான். மற்றவர்கள் ஒருவேளை ரசிகர்களை ரசிகர்களாகத் தங்கள் கட்சியிலேயே தொடரச் செய்ய முடியும் என்று நம்பிக்கை இருக்கும்வரை தாக்குதலைத் தவிர்க்கக் கூடும்.

இவ்வளவு பேர் திரண்டுவந்த மாநாட்டை இன்னமும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் த.வெ.க. தலைவர் விஜய். சவச்சவ என்றொரு கதையில் தொடங்கிய பேச்சு மிகவும் எரிச்சல் என்றால், மேடையில் அடித்த இசைக்கருவிகள்கூட முனகிக்கொண்டுதானிருந்தன; இவை முழங்கியிருந்தால் தொண்டர்கள் எவ்வளவு உற்சாகமாக இருந்திருப்பார்கள்? (திமுக மாநாட்டு மேடைகளில் இசைமுரசு நாகூர் ஹனீபாவின் குரலையும் பாடல்களையும் கேட்டிருப்பவர்கள் தங்கள் நினைவைத் தூசு தட்டிக்கொள்ளவும்; தெரியாத விஜய் ரசிகர்கள் / த.வெ.க. தொண்டர்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்). அப்புறம்,  பாவங்க, அந்தத் தொகுப்பாளர்!

ரசிகர் மன்றம் வைத்திருக்கக்கூடிய நடிகர்கள் எல்லாருமே முதல்வராகிவிட முடியாது. ஏனெனில், இவர்கள் எம்ஜிஆரும் அல்லர், விஜயகாந்தும் அல்லர். விஜய் எங்கே வித்தியாசப்படப் போகிறார், பார்க்கலாம்.

1971 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பல தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் வெற்றியை இழக்க, திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் சோர்வு. 1972-ல் திமுகவிலிருந்து விலகி அல்லது விலக்கப்பட்டு அதிமுகவைத் தொடங்கினார் எம்ஜிஆர். பெரும் பாய்ச்சல். ஆளும் திமுகவுக்கு எதிராக அதிமுகவுடன் ஸ்தாபன காங்கிரஸும் அணி சேரலாம் என்றொரு கருத்தும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு நாள், செய்தியாளர்களின் ஒரு கேள்விக்குப் பதிலளித்த காமராஜர், இந்த யூகங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைத்தாற்போல சொன்ன பதில்தான் வரலாற்று வரி – ‘திமுக, அதிமுக இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.’

திராவிடம், தமிழ்த் தேசியம், காமராஜர் என எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டுக் கலக்கி அல்லது குழப்பி (மதுரைப் பக்கம் ஃபுரூட் மிக்ஸ் என்றொரு ஃபேமஸான பானம் இருக்கிறது, என்னவெல்லாம் கலந்திருக்கிறது என எளிதில் கண்டுபிடிக்க முடியாது) சர்வரோக நிவாரணி மாதிரி நிறையச் சொல்கிறார் நடிகர் கம் தவெக தலைவரான விஜய்.

காமராஜர் சொன்னதைப் போல இதுவும் இன்னொரு மட்டையா? அல்லது புதியதோர் விதியொன்றைப் புதுமையாய் நாம் செய்வோம் என டீசர் வெளியீட்டில்  அறிவித்த மாதிரி, இவர்கள், மெயின் மூவியை ரிலீஸ் செய்யும்போது மாற்று ஒன்றை முன்வைக்கும் மரக்கலமாக மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறதா?

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் தெளிவாகிவிட வேண்டும்!

[அட்டென்ஷன் விஜய் சார்! கொஞ்சம் சோஷியல் மீடியா பக்கமும் பாருங்க. உங்களையும் உங்க கட்சியையும் ரொம்பத்தான் கழுவிக்கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். உங்க டீமையும் -இருந்தால்- வலுப்படுத்துங்கள்!]

 * * *

சொன்னா, யாரு கேட்கிறாங்க?

காற்று மாசுபாட்டுப் பிரச்சினை காரணமாகத் தலைநகர் புது தில்லி முழுவதுமே தீபாவளி கொண்டாட்டமாகப் பட்டாசுகளை வெடிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

ஆனால், என்ன செய்யறது? தீபாவளி ராத்திரி முடிந்து விடிஞ்சு பார்த்தால், நவம்பர் 1 ஆம் தேதி, மாசுபட்ட நகர்களில் உலகிலேயே முதலிடத்தைப் பெற்றிருக்கிறது புது தில்லி! இந்தத் தகவலை ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஐகியுஏர் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

சரி, நம்ம ஊர்களில் எல்லாம் எப்படி?

தீபாவளின்னாலே பட்டாசுதானுங்களே. சும்மா, ஒரு மணி நேரம்தான் வெடிக்கணும், ரெண்டு மணி நேரம்தான் வெடிக்கணும்னு கண்டிஷன்லாம் போட்டுக்கிட்டு. ரெண்டு மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்கணும்னு நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்குனுகூட யாருக்கும் தெரியல. போலீஸ்காரங்கள கேட்கப்போனா - ஏங்க, தெருத்தெருவா பட்டாசும் பத்தியுமா இருக்கிறவங்கள தேடிக்கிட்டாங்க இருக்க முடியும்? எங்களுக்கே ஆயிரத்தெட்டு வேல.

சரி. வெடி - பட்டாசு, காற்று மாசு, நீதிமன்றம், தடை உத்தரவு எல்லாத்தையும் விடுங்க, அவங்க எதையாவது தடுத்துட்டுப் போகட்டும். தகவலைக் கேளுங்கள், இந்த ஆண்டு பட்டாசு விற்பனை மட்டும் ரூ. 6 ஆயிரம் கோடி!

* * *

 ரயில்வேக்கு என்னங்க தண்டனை?

அந்நியன் படத்துல ரயில்ல ஊருக்குப் போறப்போ அநியாயம் பண்றவங்கள எல்லாம் உருமாறிப் போயி நிறைய தண்டனை தருவாரு நடிகர் விக்ரம். அந்தகூபம், கும்பிபாகம், கிருமிபோஜனம், சுசிமுகம்னு நிறைய பேர்கள்ள... படத்தைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், இவையெல்லாம் என்ன மாதிரி தண்டனைகள் என்று.

ஆனால், மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டில டிக்கெட் எடுத்ததைத் தவிர வேறெந்த குற்றமும் செய்யாத சில பயணிகளுக்கு ரயில்வே தருகிற தண்டனைக்கு என்ன  பெயர் வைக்கலாம் எனத் தெரியவில்லை. ஏ.சி. பெட்டிகளின் முன்பதிவில் 3-வது படுக்கையும் 70-வது படுக்கையும் கிடைக்கப் பெறுபவர்களே இந்த அபாக்கியவான்கள்!

மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி என்கிற மாதிரி இந்தப் படுக்கைகளில் கிடப்பவர்களை மேலேயிருந்தும் பக்கவாட்டிலிருந்தும் குளிர்ந்த காற்று திடீர் திடீரென வெள்ளம் போல கொட்டிக்கொண்டே இருக்கிறது. பாண்டியன் எக்ஸ்பிரஸில் மதுரையில் ஏறினால் திருச்சி வரைக்குமே தாங்கவில்லை. பிறகு, பிறகென்ன, கெஞ்சிக் கூத்தாடி கீழேயிருக்கிற படுக்கையில், தெரிந்தவர்கள் இருந்தால், அனுசரித்து அமர்ந்துகொண்டே செல்ல வேண்டியதுதான். இல்லாவிட்டால் கதை கந்தலாகிவிடும். போர்த்தக் கொடுத்த வெள்ளைத் துணியைச் சுருட்டுவதற்கு வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். மாசம் ஒரு முறை மட்டுமே துவைக்கிற கம்பளியாலும் காப்பாத்த முடியல!

ம், யெஸ். கரெக்ட். ஊசி வச்சுக் குத்துற தண்டனைக்குப் பேருதானே சுசிமுகம். ரயில்வேக்காரங்க ஏ.சி. வச்சுக் குத்தறதால ஏசிமுகம்னு புதுப் பேரு வச்சுறலாம். இனிமேல, இதுக்குக் காரணமானவங்களுக்கெல்லாம் ஏசிமுகம் தண்டனை கிடைக்கனும்னு சாபம்தானவிட முடியும், சாதாரண பயணியால. எல்லாரும் என்ன  அந்நியனா, ஸ்ட்ரெயிட்டா போயி தண்டிக்கிறதுக்கு?

சொல்லப் போனால்... 'கண் திறக்கப்பட்ட' நீதிதேவதையும் கடவுள் காட்டிய வழியும்!

சொல்லப் போனால்... மருத்துவத்துக்கு மருத்துவம்! டிரம்ப் அதிரடி

2025 ஆண்டிலிருந்து அடுத்த நான்கு ஆண்டுகள் அமெரிக்காவை ஆளப் போகிறவர்களின் பட்டியலில் ஒவ்வொருவராக அறிவித்துக்கொண்டிருக்கிறார் அதிபர் (தேர்வு) டொனால்ட் டிரம்ப்.டிரம்ப் அரசில் நலவாழ்வு மற்றும் மக்கள் சேவை... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... போராட்டங்களா? கொஞ்சம் பொறுங்கள்!

சில தமிழ்த் தொலைக்காட்சிகளில் ரஜினி வாரம், கமல் வாரம், விஜய் வாரம், அஜித் வாரம், சூர்யா வாரம் என்று அவ்வப்போது ஒரு வாரம் முழுவதும் மதியத்திலோ, இரவிலோ தொடர்ச்சியாக ஒவ்வொரு நடிகரின் படங்களை ஒளிபரப்பிக் ... மேலும் பார்க்க

அட்டாக்கம்ஸ் ஏவுகணை Vs ஐ.சி.பி.எம். ஏவுகணை: உக்ரைனில் உலகப்போருக்கு ஒத்திகையா?

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. ஏதோ, பழைய காலத்து தியாகராஜ பாகவதர் திரைப்படம் போல, போர் இப்போது வெற்றிகரமாக ஆயிரம் நாள்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... அரசு மருத்துவமனைகளின் இன்னொரு பக்கம்!

சென்னை, கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் மகனால் ஒரு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டது தவறு, கண்டனத்துக்குரியது. மாற்றுக் கருத்து இல்லை. தவறிழைத்தவர் மீது சட... மேலும் பார்க்க

ராணுவத்திற்கும் அஞ்சாத கவிஞர் சா வாய்! கவிதைதான் குற்றம் - 6

முதலாவது கவிஞரும் இரண்டாவது கவிஞரும் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு மூன்றாவது கவிஞர் எழுதினார்:“தலையில் சுடுகிறார்கள்ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை‘புரட்சி’ எங்கள் இதயத்தில் வாழ்கிறது.”ம... மேலும் பார்க்க

வெற்றியா, சாதனை வெற்றியா என்பதுதான் கேள்வி! வயநாடு இடைத் தேர்தல் களம்

நமது சிறப்பு நிருபர்இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் தேசிய அளவில் கவனக்குவிப்பு பெறும் தொகுதிகளில் ஒன்றாக கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் உயர்கிறது. 2024 மக்களவைத் தேர... மேலும் பார்க்க